தந்தங்களுடன் மரத்தில் சிக்கிய யானை உயிரிழந்தது

  • 6 ஆகஸ்ட் 2017
தந்தங்களுடன் மரத்தில் சிக்கிய யானை

இலங்கையில் உடவளவ தேசிய வன பூங்காவில் சில நாட்களுக்கு முன்பு பெரிய மரமொன்றின் கிளைகளுக்கிடையில் இரு தந்தங்களும் தும்பிக்கையும் சிக்கியதால், சில நாட்களாக உணவின்றி இருந்த நிலையில் காப்பாற்றப்பட்ட காட்டு யானை உயிரிழந்துவிட்டதாக வன ஜீவராசிகள் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பூங்காவின் கிழக்கு எல்லையிலுள்ள பெரியமரமொன்றின் கிளைகளுக்கிடையில் தும்பிக்கையும் இரு தந்தங்களும் அகப்பட்டு அதனை வெளியே எடுக்க முடியாமல் சில நாட்களாக நிலத்தில் விழுந்து கவலைக்கிடமான நிலையில் இந்த யானை காணப்பட்டது.

இதுபற்றி பூங்காவின் கிழக்கு எல்லை கிராம மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து அந்த மக்களின் உதவியுடன் யானைக்கு மயக்க ஊசி ஏற்றப்பட்டு மின்சார வாளின் உதவியுடன் மரக் கிளைகள் அறுக்கப்பட்டு யானை காப்பாற்றப்பட்டது.

45 வயது மதிக்கத்தக்க இந்த யானை அந்த வேளை மயக்கம் தெளிந்து எழுவதற்கு சிரமப்பட்ட நிலையில், கனரக வாகனமொன்றின் உதவியும் அதிகாரிகளினால் நாடப்பட்டிருந்தது.

தமது கிராமத்திற்குள் புகுந்து பயிர்களுக்கு சேதம் விளைவித்த யானைகளில் இந்த யானையும் அடங்குவதாக கிராம மக்களால் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இந்த யானையின் மரணம் அவர்களுக்கும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்