இலங்கை : தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் முகத்தை மறைக்க தடை

  • 8 ஆகஸ்ட் 2017

இலங்கையில் கல்வி பொதுத் தராதர உயர்தர பரிட்சைக்கு வரும்முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசார ரீதியான சீருடையில் பரிட்சை எழுதுவது தொடர்பில் எவ்விதமான தடைகளும் இல்லை என அரசு பரிட்சைகள் தினைக்களம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பல்கலைக்கழக உயர்கல்வியை தீர்மானிக்கும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரிட்சை இன்று செவ்வாய்க்கிழமை நாடெங்கிலும் ஆரம்பமாகி அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை 2230 மையங்களில் நடைபெறுகிறது.

தங்கள் கலாசார ரீதியான சீருடையில் பரிட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த கூடாது என அரசு பரிட்சைகள் ஆணையரால் மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

ஏதாவதொரு காரணத்திற்காக பரிட்சார்த்தியை சோதனையிட வேண்டிய தேவை ஏற்பட்டால் பெண் மேற்பார்வையாளரின் உதவியை நாடுமாறு பிரதான மேற்பார்வையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

"முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசார ரீதியான உடை அணிந்து தேர்வு எழுத முடியும். ஆனால் தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு முகத்தை வெளிப்படுத்துவது அவசியமாகும்" என பரிட்சைகள் ஆணையரால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி இயக்குநர் எம்.ரி. ஏ நிசாம் தெரிவிக்கின்றார்.

"பரீட்சை எழுதும் போது தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் முகத்தை மறைத்து திரையிடுவதற்கு அனுமதி இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண பரிட்சையின் போது தங்களின் கலாசார ரீதியான சீருடையான பர்தா உடை அணிந்த முஸ்லிம் மாணவிகள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் சில தேர்வு மையங்களில் உள ரீதியான பாதிப்புகளை எதிர் கொண்டதாக ஏற்கனவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் உள்ளிட்ட பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.

க.பொ.த உயர்தர தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் இடையூயின்றி பரிட்சை எழுதுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இலங்கை உலமா சபை கடந்த வாரம் மத்திய கல்வி அமைச்சருக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :