இலங்கை: வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கா ராஜிநாமா

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கா இன்று வியாழக்கிழமை தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சிறப்புரையொன்றை ஆற்றிய பின்னர் தனது ராஜினாமாவைப் பற்றி அறிவித்த அவர், நாடாளுமன்றத்தின் பின் வரிசையில் அமர்ந்து கொண்டார். .

மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிகள் விநியோகம் தொடர்பில் இடம் பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலை காரணமாகவே இவர் பதவி விலகிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

அமைச்சர் ரவி கருணாநாயக்கா, நிதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இடம் பெற்ற இந்த முறை கேடுகள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடைபெற்று வருகின்றது. இம்மாதம் 3ம் தேதி ரவி கருணாநாயக்கா, ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார்.

இதனை மையப்படுத்தி இவருக்கு எதிராக கூட்டு எதிரணியை சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றும் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாதம் பற்றி தனது நிலைப்பாட்டை இன்று வியாழக்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை காரணமாக ஆளும் கட்சிக்கு உள்ளேயும் நெருக்கடி நிலை உருவான நிலையில் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சர்கள் உள்ளிட்ட பலராலும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் வலியுறுத்தப்பட்டு வந்தன.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவர் கலந்து கொள்ளவில்லை. இவருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை பற்றி அங்கு வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்கா தற்போதைய அரசாங்கத்தில் ஏற்கனவே நிதி அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

மே மாதத்தில் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளிவிவகார அமைச்சரானார்.எற்கனவே வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

வடகொரியா கோருவது சுயபாதுகாப்பா, பேரழிவா?

''அமெரிக்க பிராந்தியம் மீது ராக்கெட் வீசும் திட்டம் விரைவில் தயார்'': வடகொரியா எச்சரிக்கை

திருடிவிட்டு கழிவறையை சுத்தம் செய்ய மறந்ததால் சிக்கிக்கொண்ட நபர்

இலங்கை: அரசு தேர்வு எழுதும்போது முகத்திரைக்கு தடை ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்