இலங்கை: தொடங்கப்பட்ட நாளிலிருந்து மருத்துவர் இல்லாத வைத்தியசாலை

நிரந்தர மருத்துவரை நியமிக்க கோரி மக்கள் ஆர்பாட்டம்
Image caption சம்பூர் பிரதேச மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க கோரி மக்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இலங்கையில் போருக்கு பின்னர் மீள்குடியேற்ற பிரதேசமொன்றில் ஜனாதிபதியினால் தொடங்கி வைக்கப்பட்ட அரசு வைத்தியசாலையொன்று திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையில் நிரந்தர மருத்துவர் இன்றி காணப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்திலுள்ள மருத்துவமனைக்கு மருத்துவர் ஒருவரை நியமிக்க கோரி இன்று வியாழக்கிழமை வைத்தியசாலைக்கு முன்பாக பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் போருக்கு பின்னர் இறுதியாக மீள்குடியேற்ற பிரதேசம் என கூறப்படுகின்ற சம்பூர் பிரதேச அரசு மருத்துவமனை கடந்த மே மாதம் 20-ஆம் தேதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையில் மருத்துவர் நியமிக்கப்படாத நிலையில் வருகை தர மருத்தவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் வாரத்தில் ஒரிரு நாட்களே வருகை தரும் அவரது சேவை திருப்தியளிப்பதாக இல்லை என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

Image caption 3 மாதங்களுக்கு முன்பு சம்பூர் பிரதேச மருத்துவமனை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த பிரச்சனை ஏற்கனவே மாகாண சுகாதார அமைச்சரகத்தின் கவனத்திற்கு தமது பிரதேச மாகாண சபை உறுப்பினர் மூலமும் சமூக அமைப்புகள் ஊடாகவும் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என அவர்களால் விசனமும் வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மருத்துவரொருவர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் பதிலீடு இன்றி அவரை விடுவிப்பதற்கு மத்திய அரசு நிர்வாகத்திலுள்ள திருகோணமலை வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகின்றார்.

அடுத்த இரு வாரத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என தான்எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்