''நாடாளுமன்ற உறுப்பினர்களே தேர்தலை ஒத்திவைக்க சட்டம் உருவாக்குவது துரதிஷ்டம்''

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் நடைபெற வேண்டிய தேர்தல்கள் உரிய நேரத்தில் நடைபெறாமல் அரசாங்கத்தினால் த்தி வைக்கப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வருத்தம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், "தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்குரியது அல்ல. சட்டத்தை இயற்றும் நாடாளுமன்றத்திற்குரியது." என்றார்.

"தேர்தல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கான சட்டங்களை உருவாக்குவது துரதிஷ்டம்" என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களும், 2015 ஆம் நடைபெற வேண்டிய 200ற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளின் தேர்தல்களும் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டுள்ளன.

Image caption தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய

இதனை தனது உரையில் சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணைய தலைவர் மகிந்த தேசப்பிரிய, "தேர்தல்கள் உரிய நேரத்திற்கு நடத்தப்படாமல் தள்ளிப்போடுவது ஜனநாயகத்திற்கு முரணானதாகவே கருத வேண்டியுள்ளது. தேர்தலை நடத்தக்கூடிய அதிகாரம் ஆணையத்திற்கு இருக்குமானால் உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தியிருக்கும்'' என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியல் அமைப்பு 19வது திருத்தம் மூலம் தேர்தல் ஆணையம் நியமிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் செயல்படத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை எந்தவொரு தேர்தலும் நடைபெறவில்லை.

உள்ளுராட்சி சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் என்ற காரணத்தை முன்வைத்து பதவிக்காலம் முடிவடைந்துள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளின் தேர்தல்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வருகின்றன.

அரசியலமைப்பு சட்டத்தில் 20வது திருத்தம் கொண்டு வரப்பட்டு அடுத்த மாதம் பதவிக்காலம் முடிவடையவிருக்கும் கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலத்தை நீடிக்க அரசு உத்தேசித்துள்ளது.

இப்படியான சூழலிலே தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதே வேளை இலங்கையில் அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே நாளில் கொண்டு வருவது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள 20வது திருத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்குள் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பாக முன் வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டு சட்ட வரைவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து இந்த ஆண்டு இறுதியில் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

உத்தேச திருத்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் இறுதியாக 2014ல் தேர்தல் நடைபெற்ற ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் வரை அதாவது 2019 செப்டம்பர் வரை நீடிக்கும் வாய்ப்புண்டு.

உத்தேச திருத்தம் கைவிடப்பட்டு தேர்தல் நடைபெற வேண்டும் என தற்போதைய ஆட்சியில் கூட்டாளியாகயுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அண்மையில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது விவாதிக்கப்பட்டு குறித்த மாகாண சபைகளின் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடைபெற வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியை ராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றார்.

இதே நிலைப்பாட்டையே ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளும் கொண்டுள்ளன.

இலங்கையில் 13வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. உத்தேச திருத்தத்தை நிறைவேற்ற அதே பெரும்பான்மை தேவை என கூறப்படுகின்றது.

அந்த திருத்தத்திற்கு தற்போது எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் திருத்தம் முன் வைக்கப்பட்டாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாத நிலையே காணப்படுகின்றது.

இந்த திருத்தத்தை ஜனநாயக விரோதம் என விமர்சனம் செய்துள்ள உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியாவும் குறித்த மாகாண சபை தேர்தல்களை பின் போட வேண்டாம் என ஜனாதிபதியை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியலைமப்பு 20-ஆவது திருத்தம் தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து நாளை செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு தீர்மானமொன்று எடுக்கப்படலாம் என எதிர்பார்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்