இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்பு

  • 15 ஆகஸ்ட் 2017
இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பான பதவியேற்பு

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

ஏற்கனவே வெளிவிவகார அமைச்சராக ரவி கருணநாயக்கா பதவி வகித்திருந்தார். அவர் நிதி அமைச்சராக இருந்தபோது, மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிகள் விநியோகம் தொடர்பில் இடம் பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக எழுந்துள்ள புகார் காரணமாக கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்திருந்தார்.

ஓய்வு பெற்ற சட்ட மா அதிபதியான திலக் மாரப்பன முதல் தடவையாக 2001-ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தொிவாகியிருந்தார். தற்போதும் தேசிய பட்டியல் மூலமே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் ஐ.தே.கட்சியின் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், விமான சேவைகள், சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் ஆகிய அமைச்சு பதவிகளையும் ஏற்கனவே இவர் வகித்திருந்தார்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த வேளை சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தான் எதிர்கொண்ட நெருக்கடி நிலை காரணமாக ஓரிரு மாதங்களில் அதாவது 2015ம் ஆண்டு அமைச்சு பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.

அதன் பின்னர் கடந்த மே மாதம் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது சிறப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்