இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் - பொதுமக்கள் இடையே பதட்டம்

இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் - பொது மக்கள் இடையே பதட்டம்

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரசு தமிழ் பள்ளிக் கூடத்திற்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று செவ்வாய்க்கிழமை பௌத்த மதகுரு அம்பிட்டிய சுமனரத்ன தேரோ உள்ளிட்ட பொது மக்கள் அத்து மீறி நுழைய முற்பட்டபோது, அந்த இடத்தில் ஓரிரு மணிநேரம் பதட்டம் ஏற்பட்டது.

நீதிமன்ற தடை உத்தரவை மீறியும், காணியின் வேலியை அகற்றியும் உள்ளே நுழைய முற்பட்டவர்கள் அனைவரும், அங்கு தயார் நிலையில் காணப்பட்ட போலீஸாரால் தடியடி நடத்தப்பட்டு கண்ணீர் குண்டுகள் வீசியும் கலைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முறாவோடை அரசு தமிழ் பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள இந்த காணி, கிராமத்தின் தமிழ் - முஸ்லிம் பிரிவுகளின் எல்லையில் காணப்படுகின்றது.

இந்த காணி அரசு தமிழ் பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானம் என பள்ளி நிர்வாகத்தினாலும் உள்ளுர் தமிழ் மக்களினாலும் சொந்தம் கொண்டாடப்படுகின்றது.

காணியின் ஒரு பகுதியை, முஸ்லிம்கள் அபகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டும் தமிழர் தரப்பு, அவ்விடத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தங்களிடம் இந்த காணியின் உரிமை தொடர்பான சட்ட ரீதியான ஆவணங்கள் இருப்பதாக முஸ்லிம் தரப்பும் கூறுகின்ற நிலையில் சமீபகாலமாக இன ரீதியான முரண்பாடுகளும் அந்த பகுதியில் நிலவுகின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை அம்பிட்டிய சுமனரத்ன தேரோ தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர், அந்த பகுதியை சேர்ந்த தமிழர்கள் காணியின் எல்லைகளை அகற்ற நுழைய முற்பட்ட வேளையில், அங்கு தயாராக இருந்த போலீஸாரால் தடுக்கப்பட்டுள்ளனர்.

காணிக்குள் வெளியாட்கள் யாராக இருந்தாலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை போலீஸார் அந்த இடத்தில் காட்டியபோது, அந்த உத்தரவை பௌத்த மதகுரு ஒருவர் கிழித்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் பதட்டம் ஏற்பட்ட நிலையில், அங்கு தயாராக இருந்த போலீஸார் தடியடி பிரயோகம் செய்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்து சுமூக நிலையை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போலீஸாரின் இந்த தாக்குதலின்போது, பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த இடத்திற்கு சென்றிருந்த கிழக்கு மாகாண காணி ஆணையாளார் அனுர தர்மரத்ன, இரு தரப்பு ஆதாரங்களையும் ஆராயந்து காணி உரிமை தொடர்பான முடிவை நாளை புதன்கிழமை அறிவிப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்