இலங்கை : குப்பைகளை நாடிச் செல்லும் காட்டு யானைகள்

  • 16 ஆகஸ்ட் 2017

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகள் நடமாடும் வனப்பகுதியில் குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படுவதால் அந்த இடத்திற்கு யானைகள் உணவு தேடி வருவதை தினமும் காண முடிகிறது.

Image caption குப்பைகளையும் கழிவுகளையும் உண்ணும் யானைகள்

வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச உள்ளுராட்சி சபைகளினால் சேகரிக்கப்படும் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படும் திறந்த வனப்பகுதியில் இந்த யானைகள் வருகின்றன.

தினமும் பகல் நேரங்களில் 5 -7 காட்டு யானைகளை கூட்டம் கூட்டமாக அந்த இடத்திற்கு வருவதாகவும், இரவு வேளையில் காட்டுக்கு திரும்பும்போது பயிர்களையும், உடமைகளையும் சேதமாக்குவதாகவும் இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கழிவுகளையும், குப்பைகளையும் யானைகள் உணவாக உட்கொள்வது அவற்றின் உயிருக்கே ஆபத்து. இது போன்ற சந்தர்ப்பங்களில் வேறு இடங்களில் நிகழ்ந்துள்ள யானைகளின் உயிரிழப்புகள் ஏற்கனவே பதிவாகியுள்ளதாக வன உயிரினத்துறை அமைச்சக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

மட்டக்களப்பு - பொலநறுவ நெடுஞ்சாலையோரமாக காணப்படும் ஆலங்குளத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதியில் சுமார் 5 வருடங்களாக குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளினால் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படுவதாக கூறப்படுகின்றது.

இதனால் வன உயிரினங்கள் மட்டுமல்ல, அந்த பகுதி சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையமொன்று ஐரோப்பிய ஓன்றியத்தின் உதவியுடன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட போதிலும், தொடர்ந்தும் அந்த இடத்திலே குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படுவதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் வன உயிரின வலயங்களில் 54 இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், அந்த இடங்களில் சுமார் 300 யானைகள் வரை நடமாடுவதாகவும் வன உயிரின அமைச்சகம் கூறுகின்றது.

இந்த இடங்களில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மின்சார வேலிகளை அமைப்பதற்கு இந்த அமைச்சகத்திற்கு ஜுன் மாதம் அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது.

இருந்தபோதிலும், வன உயிரின இலாகாவினால் இது போன்ற இடங்களும் அடையாளங்களும் காணப்பட்டிருந்தால் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்