இலங்கை: 47 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படையின் தளபதியாக தமிழர் நியமனம்

வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா படத்தின் காப்புரிமை navy.lk
Image caption வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா

இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழர் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.

இலங்கை கடற்படையின் 21-வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள இவர் இன்று, வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

1982-ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர உத்தம சேவா ஆகிய விருதுகளைப் பெற்ற கடற்படையின் மூத்த அதிகாரியாவார்.

புதிய கடற்படைத் தளபதியின் சேவைக் காலம் இம்மாதம் 22-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு கூறுகின்றது.

இலங்கையில் கடந்த 47 ஆண்டுகளில், முப்படையொன்றின் தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னதாக, நவம்பர் 16,1960 தொடக்கம் ஜூலை 30, 1970 வரை ரியர் அட்மிரல் ராஜநாதன் கதிர்காமர் கடற்படைத் தளபதியாக பதவி வகித்துள்ளார். இலங்கை கடற்படைக்கு நீண்டகாலம் தளபதியாக இருந்தவரும் அவரே.

அதன் பின்னர் இலங்கை தமிழரொருவருக்கு முப்படையொன்றில் கிடைத்த அதி உச்ச பதவியாகவே புதிய கடற்படை தளபதியின் நியமனம் கருதப்படுகின்றது.

அதற்கு முன்னதாக, பிப்ரவரி 9, 1955 முதல் டிசம்பர் 31, 1959 வரை தமிழரான மேஜர் ஜெனரல் ஏ.எம்.முத்துக்குமாரு இலங்கை ராணுவத்தின் தளபதியாகப் பதவி வகித்துள்ளார்.

தற்போது கடற்படை தளபதி பதவியிலுள்ள வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இம்மாதம் 22-ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அதன் பின்னர், பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்