இலங்கை : நீதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய பிரதமர் பரிந்துரை

இலங்கையில் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சக பொறுப்புகளிலிருந்து நீக்குமாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Image caption விஜயதாஸ ராஜபக்ஷ

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரிலேயே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹபீர் ஹாசிம் கூறுகின்றார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், கட்சி மற்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புகளை மீறும் வகையில் விஜயதாஸ ராஜபக்ஷ தொடர்ச்சியாக செயல்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தனது விளக்கத்தை அளிக்க நேற்று திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஷ ஐ.தே.கட்சி மூலம் தெரிவான கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார்.

இவரது அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் உள்ளிட்ட ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியும், விசனமும் கொண்டிருந்தனர்.

முந்தைய ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பாக, இவருக்கு எதிராகவே அவர்களால் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரணில் விக்கிரமசிங்க

அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் குறித்த சில அமைச்சர்கள் தொடர்பாகவும் விஜயதாஸ ராஜபக்ஷ கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

பௌத்த அமைப்புகள் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சு பதவியிலிருந்து விலகவோ அல்லது விலக்கப்படவோ கூடாது என ஏற்கனவே குரல் எழுப்பி வருகின்றன.

இது தொடர்பாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடமிருந்து எவ்விதமான கருத்துக்களும் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்