இலங்கை அமைச்சர் பதவியில் இருந்து விஜயதாஸ ராஜபக்ஷ நீக்கம்

இலங்கை நீதி மற்றும் பௌத்த சாசனத் துறைகளின் அமைச்சர் பொறுப்பில் இருந்து விஜயதாஸ ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க

இது தொடர்பான கடிதம் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தார். அதை முறைப்பபடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஏற்றுக் கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாஸ ராஜபக்ஷ அண்மையில் அரசுக்கு எதிரான விமர்சனங்களை வெளியிட்டதாக அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.

Image caption ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் விஜயதாஸ ராஜபக்ஷ (வலது)

குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 சதவீத பங்குகளை சீன நிறுவனமொன்றுக்கு கையளிக்க ஒப்பந்தம் செய்தது தொடர்பாக அவர் விமர்சனங்களை வெளியிட்டார். தனது கருத்தைத் திரும்பப் பெறப் போவதில்லை என்றும் அவர் உள்நாட்டு ஊடகமொன்றிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஜயதாஸ ராஜபக்ஷ, அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, திருகோணமலையில் இரு நாட்களுக்கு முன்பு விஜயதாஸ ராஜக்ஷ கூறுகையில், இலங்கை உள்நாட்டு போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காகவே இவ்வாறு இலக்கு வைக்கப்படுவதாகக் கூறியிருந்தார்.

Image caption விஜயதாஸ ராஜபக்ஷ

நாட்டையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்க பௌத்த மகா சங்கம் முன் வர வேண்டிய காலம் வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சட்ட வல்லுநரான விஜயதாஸ ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். 2004 - 2010 வரையிலான ஆட்சியில் அரசியலமைப்பு அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த அவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :