இலங்கை: உள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு

25 சதவீதம் கோரிக்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தத்தில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டாரம் மற்றும் விகிதாசாரம் என கலப்பு முறையில் உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா வியாழக்கிழமை உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன் வைத்தார். இந்த சட்டத்திருத்தம் விவாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை வாக்கெடுப்புக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே 25 வருடங்களுக்கும் மேலாக விகிதாசார ரீதியாகவே உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். அதற்கு முன்னதாக வட்டார ரீதியாக தெரிவு இருந்தது.

"நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தின்படி வட்டாரம் மற்றும் விகிதாசாரம் இரண்டையும் கொண்ட கலப்பு முறையில் தெரிவு இடம்பெறும்" என தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

"வட்டார ரீதியாக 60 சதவீதமும் விகிதாசாரத்தில் 40 சதவீதமும் உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறுகிறார்.

கடந்த அரசாங்கத்தினால் 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் 70 மற்றும் 30 என இந்த கலப்பு முறை இடம்பெற்றிருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் பெண்களுக்கு கிடைத்துள்ள 25 சதவீத இட ஒதுக்கீடு என்பது சபைகளில் 25 சதவீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பதவிக் காலம் முடிவடைந்துள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2 - 3 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் தள்ளிப் போடப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தில் திருத்தம், எல்லைகள் மீள்நிர்ணயம் என்ற காரணங்களை முன்வைத்து அரசாங்கத்தினால் தேர்தல்கள் தொடர்ந்தும் தள்ளிப் போடப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Buddhika Weerasinghe/Getty Images

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணையமும் விசனம் வெளியிட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில வாரங்களில் உள்ளுராட்சி சபைகள் தேர்தல் தொடர்பான அறிவிப்பு தேர்தல் ஆணையத்திலிருந்து வெளிவராலாம் என எதிர்பர்க்கப்படுகின்றது.

பிற செய்திகள்:'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்