இலங்கை: சுட்டித்தனத்தால் பொறிவெடியில் சிக்கும் குட்டி யானைகள்

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டு ஏராளமான யானைக்குட்டிகள் உள்நாட்டில் ''ஹக்கபட்டாஸ் " என்று அழைக்கப்படும் பொறி வெடியில் சிக்கி இறக்கின்றன.

குழந்தையொன்று கையில் அகப்படும் பொருளை சுட்டித் தனத்தால் வாயில் போடுவதைப் போல யானைக் குட்டிகளும் நடந்து கொள்வதாக விலங்கு மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.

இலங்கையில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு ஈயத்திலான சன்னங்கள் மற்றும் பட்டாசு தூள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சட்ட விரோதமாகத் தயாரிக்கப்படும் பொறி வெடி தான் உள்ளுர் மக்களால் '' ஹக்கபட்டாஸ் " என அழைக்கப்படுகின்றது.

உள்நாட்டில் அநேகமான யானைகள் துப்பாக்கி சூடு காரணமாகவே உயிரிழக்கின்றன. அந்த வரிசையில் '' ஹக்கபட்டாஸ் " காரணமாக யானைகளின் மரணங்கள் அடுத்த இடத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் இலாகா தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

2012 - 2016 வரையிலான ஆண்டுகளில் 32 தொடக்கம் 50 வரையிலான யானைகள் ஹக்கக்பட்டாஸில் சிக்கி உயிரிழந்துள்ளன. கடந்த வருடத்தில் துப்பாக்கி சூடு காரணமாக 52 யானைகள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை ஹக்கக்பட்டாஸில் சிக்கி 47 யானைகள் இறந்துள்ளன. .

ஹக்கபட்டாஸின் பயங்கரமான தன்மையை அறியாத குட்டி யானைகள் அதனை குழந்தைத்தனமாக வாயில் எடுக்கும் போது வெடித்து சிதறுவதால் வாய் பலத்த சேதமடைகிறது.

"ஹக்கப்பட்டாஸ் " தாக்குதலில் அகப்பட்ட யானை உணவை உண்ண முடியாத நிலையில் 3 மாதங்கள் வரை துன்பப்பட்டு பட்டினியால் இறந்து விடுவதாக கூறப்படுகிறது.

"காயம் சுகமடைந்து உயிர் பிழைத்தாலும் அவற்றின் தசைப் பகுதிக்குள் புகுந்த இரும்பு சன்னங்களின் சிதறல்களின் அரிப்பு மெல்ல மெல்ல கொன்று விடும்" என விலங்கு மருத்துவ நிபுணர்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

"உரிய நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படாவிட்டால் கிருமி தொற்று அதிகரித்து மரணம் ஏற்படும்" என்கின்றார் வன விலங்கு மருத்துவரான டாக்டர் விஜித்த ஹேரத்.

இந்த மாதம் முற் பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அண்மித்த பகுதியில் இது போன்ற தாக்குதலில் அகப்பட்ட குட்டியானையொன்று காப்பற்றப்பட்டு சரணலாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் பின்னர் மரணமடைந்து விட்டது.

" உயிரிழந்த குட்டியானையின் வாயில் காணப்பட்ட கிருமி தொற்று மூளை வரை பரவியிருந்ததே இம் மரணத்திற்கு காரணம் " என்று அவர் கூறுகின்றார்.

" யானைகள் சரணாலயத்தில் கூட இதனை காண முடிகிறது. தரையில் பாட்டில் மூடியொன்றைக் கண்டால் அதனை யானைகள் வாயில் எடுத்து பின்னர் துப்பிவிடுகின்றன," என்கிறார் அவர்.

காட்டில் மிருகங்களை வேட்டையாடுவதற்கு சிறிய வடிவில் வைக்கப்படும் ஹக்கபட்டாஸில் அநேகமாக பன்றிகள் அகப்பட்டு கொள்கின்றன. எதிர்பாரதவகையில் நாய்களும் மாட்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவிக்கின்றனர். வருடாந்தம் 35 - 50 யானை வரையில் ஹக்கக்பட்டாஸில் சிக்கி உயிரிழப்பதாக கூறப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்