யாழ்ப்பாணம்: படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் ஒரு மாணவர்நீந்தி உயிர்தப்பியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

இன்று திங்கள்கிழமை மதியம் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்த 5 மாணவர்களின் உடல்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், ஆறாவது உடல் கடற்படையின் சுழியோடி பிரிவினரால் சில மணித்தியாலங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது,

இந்த மாணவர்களின் உடல்களை பொதுமக்களின் உதவியுடன் கடற்படையினர் கண்டுபிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதின்மூன்று மாணவர்கள் தமது சக மாணவர் ஒருவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து மண்டைதீவு கடற்கரைக்குச் சென்றதாகவும், அங்கிருந்த படகு ஒன்றில் 7 மாணவர்கள் கடலுக்குள் சென்றதாகவும், அந்தப் படகு கவிழ்ந்ததனால் இந்த அனர்த்தம் நேர்ந்ததாதவும், காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மாணவர்கள் 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த மாணர்வகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ் காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சண்டிலிப்பாயைச் சேர்ந்த 21 வயதுடைய திளேஸ், நல்லூரைச் சேர்ந்த 20 வயதுடைய பிரவீன், கொக்குவிலைச் சேர்ந்த 20 வயதுடைய தனுரதன், உம்பிராயைச் சேர்ந்தவர்களான 21 வயது நந்தன் ரஜீவன் மற்றும் 19 வயது சின்னத்தம்பி நாகசுலோசன் ஆகிய மாணவர்களே இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

பாலியல் வல்லுறவு வழக்கில் ஹரியானா சாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஹரியானா சாமியாருடன் உள்ள பெண் யார்?

'நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி மீட்கப்படும்'

டோக்லாம்: படைகளை வாபஸ் பெற இந்தியா - சீனா ஒப்புதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்