இலங்கை : முன்னாள் அமைச்சர் அஸ்வர் மறைவு

இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 80.

Image caption அஸ்வர்

கடந்த இரண்டு வாரங்களாக அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சி ஊடாக அரசியலில் நுழைந்த அவர், 1955ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அக் கட்சி மேடைகளில் முக்கிய பேச்சாளராக விளங்கினார்.

மறைந்த ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மற்றும் ஆர். பிரேமதாசா ஆகியோரின் பொது உரைகளைத் தமிழில் மொழி பெயர்ப்பவராக விளங்கிய அஸ்வர், அத்தலைவர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராகவும் இருந்தார்.

அமைச்சுப் பதவிகள்

1990ம் ஆண்டு தொடக்கம் 2004 வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் முஸ்லிம் விவகார ராஜங்க அமைச்சு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் ராஜங்க அமைச்சுப் பதவிகளும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தன.

2008ம் ஆண்டு ஐ.தே.கட்சி தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து விலகி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். அவ்வேளை பதவியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகப் பணியாற்றும் வாய்ப்பை இவர் பெற்றிருந்தார்.

ராஜபக்ச ஆதரவு அணியில்

2010ம் ஆண்டு அக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

தனது பதவிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் எதிரணியுடன் வாதம் புரிவதில் ஆற்றல் மிக்கவர் என்ற அடையாளத்தை கொண்டிருந்த அவர், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடம் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சிறந்த பேச்சாளர் , கவிஞர் , எழுத்தாளர் பத்திரிகையாளர் , மும்மொழி ஆற்றல் பெற்றவர் என பல பரிமாணங்களைக் கொண்டிருந்த அன்வர் முஸ்லிம் சமூக அமைப்புகளிலும் முக்கியப் பதவிகளை வகித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :