இலங்கை: உள்நாட்டுப் போரில் காணாமல் போனோர் நினைவு கூரல்

சர்வதேச காணாமல் போனோர் தினம்

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, காணாமல் போனவர்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து நீதி வழங்கக் கோரி இன்று புதன்கிழமை வடக்கு - கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதில் காணாமல் போன நபர்களின் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் அளித்துள்ள பரிந்துரைகளின்படி செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசின் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்துக்களும் போராட்டங்களின் போது வலியுறுத்தப்பட்டது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என குறிப்பிடப்பட்டு இந்த போராட்டத்திற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.

இந்த போராட்டங்களின் முடிவில் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதப்பட்ட மனுக்கள் உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திருகோணமலை, அம்பாரை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது, நிகழ்வில் பங்கேற்ற ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் ''அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலக சட்டத்தை முற்றாக எதிர்ப்பதாகவும் சர்வதேச விசாரணை தேவை " என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 12ம் தேதி ஜனாதிபதியுடனான சந்திப்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை அதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தில் பொறுப்பு கூறும் பொறிமுறைகள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டும்.

யுத்தத்தின் இறுதி கட்டங்களில் ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் மற்றும் ரகசிய சிறை முகாம்களையும் அதில் உள்ளவர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் விரைவில் வெளியிட வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக இருந்தவர்களை விசாரணை செய்வதற்கும் தண்டிப்பதற்கும் அரசாங்கம் உடன்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் அதில் முன் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சர்வதேச காணாமால் போனோர் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ''வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் அரசாங்கம் உயரிய கவனம் செலுத்த வேண்டும்'' என கேட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Buddhika Weerasinghe/Getty Images

" உள்நாட்டில் உறவுகளால் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு அல்லது கடத்தப்பட்டவர்களுக்கு அல்லது காணாமல் போனவர்களுக்கு உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதனை அறிவது அவர்களின் அடிப்படை உரிமை.

குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நியாயம் பெற்றுத் தர அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு அரசு வழங்கிய உறுதிமொழிகளை செயல்படுத்துவதையும் சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் " என்றும் அறிக்கையில் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்