மியான்மர் ரொஹிஞ்சா முஸ்லிம்களை பாதுகாக்க இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்

  • 1 செப்டம்பர் 2017

மியன்மரில் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்துள்ள இலங்கை முஸ்லிம்கள், ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் தலையிட்டு ரொஹிஞ்சா முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குரல் எழுப்புகின்றனர்.

மியான்மரில் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் குறித்து கவலை கொண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள் இது தொடர்பாக இலங்கை அரசு பர்மிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனத்தை வெளிப்படுத்தி இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஆர்பாட்டங்களும் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் நடைபெற்றன.

காத்தான்குடி, ஓட்டமாவடி , அக்கரைப்பற்று மற்றும் கிண்ணியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர் .

வெள்ளிக்கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் ரொஹிஞ்சா முஸ்லிம்களைப் பாதுகாக்க ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் முன் வர வேண்டும் என்று குரல் எழுப்பினர்.

ஐ.நா பொதுச் செயலாளர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோருக்கான மனுக்களும் ஏற்பாட்டாளர்களினால் உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

Image caption கிண்ணியாவில் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம்.

இதேவேளை, ரொஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் ஐ.நா தலையிடவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதின் கூறுகின்றார். இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீது மியான்மர் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் திட்டமிட்ட இன சுத்திகரிப்பு என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்

ராஜங்க அமைச்சர் எம்.எல்,ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஐ.நா சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் இலங்கை அலுவலக தலைமை அதிகாரியான ஜுசெப்பே க்ரொசெட்டியை சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடி ரொஹிஞ்சா முஸ்லிம்ககளை பாதுகாக்குமாறு கேட்டுள்ளார்.

ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மியான்மர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை அரசை கோரும் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் நாடாளுமன்ற ஓத்திவைப்பு வேளை இந்த பிரேரணைக்கான முன் அறிவித்தலை கொடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்