ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக சாட்சி சொல்ல தயார் - சரத் பொன்சேகா

முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடைபெற்றால், அவருக்கு எதிராக சாட்சியங்களை வழங்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Image caption கோப்புப்படம்

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக தென் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்குகள் தொடர்ப்பாக கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, போர் நடைபெற்ற காலப்பகுதியில் தானே இலங்கை ராணுவத்திற்கு தலைமை தாங்கியதாக தெரிவித்தார்.

ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக புகார்

அப்போது ஜகத் ஜயசூரிய வவுனியாவில் கட்டளை அதிகாரியாக பணியாற்றியதாக தெரிவித்த சரத் பொன்சேகா, அப்போது அவர் புரிந்த பல குற்றங்கள் தொடர்பாக தனக்கு புகார்கள் கிடைத்ததாக கூறியுள்ளார்.

ஜகத் ஜெயசூரிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னரும், அவர் மேலும் பல குற்றங்களை புரிந்துள்ளதாக குற்றம்சாட்டிய சரத் பொன்சேகா அது தொடர்ப்பான சகல விபரங்களும் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார்.

ஜகத் ஜெயசூரிய குற்றங்கள் புரிவதற்கு கடந்த ஆட்சியின் பாதுகாப்பு செயலாளர் உட்பட, கடந்த ஆட்சியின் தலைவர் ஆகியோர் தனது ஆசீர்வாதத்தை வழங்கியதாக கூறிய சரத் பொன்சேகா, இலங்கை ராணுவத்தின் நற்பெயரை காப்பதற்காக முன்னாள் ராணுவ தளபதி ஜெயசூரியவுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் சாட்சி சொல்ல தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, ஜகத் ஜயசூரியவை ராணுவ தளபதியாக நியமிக்க வேண்டாமென்று கடந்த ஆட்சியாளர்களிடம் பலர் வேண்டுகோள் விடுத்த போதிலும் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டதாக தெரிவித்தார்.

ஜகத் ஜெயசூரிய போன்றவர்கள் மேற்கொண்ட குற்றங்கள் காரணமாகவே இலங்கை ராணுவத்தின் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய சரத் பொன்சேகா, தவறு புரிந்தோருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதன் மூலம் மாத்திரமே இலங்கை ராணுவத்தின் நற்பெயரை காக்க முடியுமென்று கூறினார்.

குற்றச்சாட்டுக்கள் மறுப்புக்கு பதில்

ஆனால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, போர் நடைபெற்றபோது முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா இலங்கை ராணுவத்திற்கு தலைமை தாங்கி உத்தரவுகளை வழங்கியதாகவும், அதனால் தனக்கு எதிராக போர் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியாது என்றும் அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா, யுத்தம் நடைபெற்றபோது தானே ராணுவத்திற்கு தலைமை தாங்கி உத்தரவுகளை வழங்கியது உண்மை என்ற போதிலும், போர் குற்றங்களை புரிவதற்கு தான் ராணுவத்திற்கு எந்த விதமான உத்தரவுகளையும் வழங்கவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :