ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இலங்கையில் முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இலங்கையில் முஸ்லிம் பெண்கள் குரல்

மியான்மரில் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து இலங்கையில் முஸ்லிம் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் முஸ்லிம் குடியிருப்புகளை மட்டும் கொண்ட பிரதேசமான காத்தான்குடியில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு காணப்பட்டனர்.

இந்த தாக்குதல்களை நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தும் வாசகங்களும் அதில் காணப்பட்டன.

மியன்மார் நாட்டின் நடைமுறைத் தலைவி ஆங் சான் சூசிக்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசு மீள வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இவர்களால் வலியுறுத்தப்பட்டது.

மியன்மார் நாட்டில் பெண்கள் ,குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஈவு இரக்கமின்றி இன்றி கொல்லப்படுவதாகவும், அந்நாட்டின் நடைமுறைத் தலைவியான ஆங் சான் சூசி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா ஹம்சா கூறினார்.

"மனித நேயமுள்ள எவரும் இந்த படுகொலைகளை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். எனவே ஆங் சான் சூசிக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு மீளப் பெறவேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தி குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்