செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுக்க எடப்பாடிக்கு முழு அதிகாரம்: அதிமுக நிர்வாகிகள் தீர்மானம்

அஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம்.
Image caption அஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம்.

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவே இறுதியானது என இன்று நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டவர்களின் கூட்டம் இன்று காலையில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

109 எம்.எல்.ஏ.க்கள்

பேராவூரணியைச் சேர்ந்த கோவிந்தராசுவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், 109 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நடக்கவிருக்கும் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழுவில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "சட்டமன்றக் குழுத் தலைவரும் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையை ஏற்று அவர் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளையும் முழுமனதுடன் ஏற்பதாக" கூறப்பட்டிருந்தது.

மாவட்டச் செயலாளர் கூட்டம்

இதற்குப் பிறகு, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது.

தினகரனுக்கு ஆதரவாக உள்ள 5 மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை முழுமையாக அழைத்துவருவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், "தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான தங்க தமிழ்ச்செல்வன், அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக்கூட்டி, தங்களுக்கு ஆதரவு இல்லையென்பதை அவர்களே நிரூபித்துக்கொண்டதாகக் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்