என் உயிருக்கு அச்சுறுத்தல்: வெலிக்கடை கொலைகளின் சாட்சியாளர்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக 2012-ம் ஆண்டு வெலிக்கடை சிறைக்கைதிகளின் கொலை தொடர்பான சம்பவத்தின் பிரதான சாட்சியாளரான சுதேஷ் நந்திமால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

என் உயிருக்கு அச்சுறுத்தல்: வெலிக்கடை கொலைகளின் சாட்சியாளர்

பட மூலாதாரம், ISHARA S.KODIKARA/Getty Images

படக்குறிப்பு,

நவம்பர் 9, 2012 அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் மோதல் சம்பவம் நடந்தது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் அண்மையில் தான் தங்கியிருந்த மொரட்டுவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல் துறையிடம் புகார் செய்துள்ள போதிலும் நம்பிக்கை வாய்ந்த விசாரணையொன்றை நடத்த காவல் துறையினர் இதுவரை தவறியுள்ளதாக நந்திமால் டி சில்வா குற்றம்சாட்டினார்.

அதேபோன்று உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ள தனக்கு போதிய பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

வெலிக்கடை சிறைக் கைதிகளின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் அதன் சாட்சிகளை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், அரசாங்கம் இதனைக் கவனத்திற்கு எடுத்து சாட்சியாளர்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மேலும் தெரிவித்தார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த போலிஸ் திணைக்களத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவர், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக தாங்கள் முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

2012-ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அரச பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது ஏற்பட்ட மோதல்களின்போது 27 சிறைக் கைதிகள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

படக்குறிப்பு,

சுதேஷ் நந்திமால் டி சில்வா

இந்த கொலைகளுக்கு கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்பட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பு கூரவேண்டுமென்று போலீசாரிடம் புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் ஃபொன்சேகா, வெலிக்கடை சிறைக் கைதிகளின் கொலைகளுக்கு அப்போது ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜகத் ஜெயசூரிய பொறுப்புக்கூர வேண்டுமென்று தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதிகளுடன் மோதல் எட்டப்பட்ட போது ஜகத் ஜெயசூரியவின் உத்தரவின் படி ராணுவம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த மோதல்களின் போது இறந்த கைதிகளின் உறவினர்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் கூறிய சரத் ஃபொன்சேகா, தவறொன்று நிகழ்ந்துள்ள காரணத்தினால்தான் அரசாங்கம் இவ்வாறு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனவே இந்தக் கொலைகள் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :