ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை: ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்பாட்டம்

மியான்மர் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் விவகாரத்தில் அந்நாட்டு அரசுக்கும், ராணுவத்திற்கும் கண்டனத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை முஸ்லிம்கள் இன்று வியாழக்கிழமை தலைநகர் கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக மியான்மர் ராணுவம் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவிப்பதாகவும் அந்நாட்டு அரசுக்கும் ராணுவத்திற்கும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்களுக்கு விடுத்திருந்தது.

ஏற்கெனவே கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் ஒன்றுகூடி மியான்மர் தூதரகம் வரை ஆர்ப்பாட்ட பேரணி நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் கடைசி நேரத்தில் போலிஸாரால் அதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. அதனையடுத்து ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் முன்பாக ஒன்றுகூடிய முஸ்லிம்கள், அங்கிருந்து பேரணியாக மருதானை ரயில் நிலைய சந்திப்பை சென்றடைந்தனர். பேரணி முடிவில் கண்டன கூட்டமொன்றும் நடைபெற்றது.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் மியான்மர் அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் எதிரான வாசக அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பிக் கொண்டே போராட்ட இடத்தை சென்றடைந்தனர்.

அந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இன ரீதியான தாக்குதல்கள் மற்றும் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை சித்தரிக்கும் பதாகைகளையும், வாசக அட்டைகளையும் அங்கு காண முடிந்தது.

முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு மியான்மர் நாட்டின் நடைமுறை தலைவியாக விளங்கும் ஆங் சான் சூச்சி ஆதரவு வழங்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவருக்கு எதிராகவும் கண்டண கோஷங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் எழுப்பினார்கள.

"ஐ.நா, சர்வதேச சமூகம் மற்றும் சௌதி அரேபியா உள்ளிட்டவை தலையிட்டு, ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முன்வர வேண்டும்" என ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுத்துள்ளது.

"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூர சம்பவங்கள் குறித்து ஐ.நா நீதி விசாரனை தேவை" என்றார் ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவரான எம்.எப்.எம். ரஸ்மின்.

"தாக்குதலை நிறுத்த மியான்மர் அரசுக்கு இலங்கை அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கையிலுள்ள மியான்மர் தூதரகம் மூடப்பட்டு தூதர் வெளியேற்றப்பட வேண்டும்" என்ற கோரிக்கைகளை தாங்கள் இலங்கை அரசிடம் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு பிரேரணை கொண்டு வந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்" என்ற கோரிக்கையை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

ரோஹிஞ்சா எனப்படும் நான் யார்?

காணொளிக் குறிப்பு,

ரோஹிஞ்சா

"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அந்நாட்டு பிரஜைகளாக கருதப்பட்டு வாழ்வாதார உரிமைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளவர்கள் சர்வதேச கண்காணிப்பில் மீளக் குடியேற்றப்பட வேண்டும்.

மியான்மரின் நடைமுறை தலைவியாக விளங்கும் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசை மீளப்பெற வேண்டும்" என்ற கோரிக்கையையும் ஐ.நா, அரபு நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திடம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முன்வைத்துள்ளது.

இது தொடர்பான மனுக்களை நாளை வெள்ளிக்கிழமை உரிய தரப்பினரிடம் கையளிக்கப் போவதாக எம்.எப்.எம். ரஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் நெருக்கடியில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

காணொளிக் குறிப்பு,

தொடரும் நெருக்கடியில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :