இலங்கை: ரோஹிஞ்சாக்களுக்கு ஆதரவாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

மியான்மர் ரோஹிஞ்சா முஸ்லிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்நாட்டு அரசை கண்டித்தும் இலங்கையில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சாலைகளில் ஓன்று திரண்டு இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ரோஹிஞ்சாக்களுக்கு ஆதரவாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காவத்தமுனையிலும், அம்பாரை மாவட்டத்தில் கல்முனை , சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களிலும், பேரணிகளிலும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, மியான்மர் அரசு திட்டமிட்டு முஸ்லிம்களை படுகொலை செய்வதாக குற்றம் சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை நிறுத்த வலியுறுத்தும் வகையிலான கோஷங்களை எழுப்பினர்.

அரபு நாடுகள் ஒருமித்து செயல்பட வேண்டிய அவசியத்தையும், சர்வதேச சமூகம் தலையிட்டு முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு வேண்டுகோளும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டோர் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிவாசல்களுக்கு முன்பாக கூடிய ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து குறிப்பிட்ட தூரம் வரை பேரணிகளாக சென்றனர்.

காவத்தமுனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மியான்மரின் நடைமுறை தலைவியான ஆங் சான் சூச்சியின் உருவ பொம்மையொன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதேவேளை ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களுக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடும்போக்கு பௌத்த அமைப்பு என கூறுப்படும் பொதுபல சேனா உள்நாட்டில் குறிப்பாக, முஸ்லிம்கள் தொடர்பாக ஏற்கனவே கடும்போக்கை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான மியான்மரின் ரக்கைன் மாநிலத்திலுள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்தும் இலங்கை முஸ்லிம்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த இரு வாரங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் 15க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இலங்கையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என கூறும் பொதுபல சேனா, இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளது.

"ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவான இந்த ஆர்பாட்டங்கள் உள்நாட்டில் இனங்களுக்கு இடையிலும், தங்களுக்கிடையிலும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேரில் சந்தித்து பேசுவதற்கு விரும்புவதாக பொதுபல சேனாவின் பிரதான நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :