இலங்கையில் கருக்கலைப்பு சட்ட வரைவு: மதத் தலைவர்களுக்கு விளக்கம்

இலங்கையில் சுகாதார அமைச்சினால் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள கருக்கலைப்பு சட்ட திருத்த வரைவுக்கு மதத் தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் குழுவொன்று சர்வமத தலைவர்களை சந்தித்து உத்தேச திருத்தம் தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

கருக்கலைப்பு

பட மூலாதாரம், Getty Images

பாலியல் துஷ்பிரயோகம் , 16 வயதுக்கு கீழ் கர்ப்பம் தரித்தல் ( பாலியல் வன்முறை), 12-ஆம் வாரம் கருவில் தீவிர குறைப்பாடு (serious foetal impairments) போன்ற சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர மருத்துவர்கள் குழுவொன்றினால் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

பௌத்தம் , கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் எந்தவொரு காரணங்களுக்காகவும் கருக்கலைப்பு என்பது சட்ட ரீதியாக அனுமதிக்க முடியாது என தொடர்ந்து தெரிவித்து வருவதால் இது தொடர்பான திருத்த சட்டத்தை கொண்டு வர முடியாத நிலை சுகாதார அமைச்சுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சந்திப்பில் உத்தேச சட்டம் தொடர்பாக மதத்தலைவர்களுக்கு றூகுனு பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் சுஜீவ அமரசேன விளக்கமளித்திருக்கின்றார்.

சட்ட மருத்துவ அதிகாரி , உள நல மருத்துவர் உள்ளிட்ட மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு பரிந்துரை செய்ய வேண்டும். இருப்பினும் அது தொடர்பாக இறுதி தீர்மானம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும்.

அரச மருத்துவர்களினால் அரச மருத்துவமனைகளில் தான் கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும். பாலியல் வன்முறை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பாக போலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பன போன்ற கடுமையான ஒழுங்கு விதிகளை கொண்டதாக உத்தேச சட்ட திருத்தம் அமையும் என அவரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவமனைகளிலே கருக்கலைப்பு செய்ய சட்ட ரீதியான அனுமதி கிடைப்பதால் முறைகேடுகள் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அது மட்டுமன்றி ஊக்குவிப்பாக அமையாது என்றும் இந்த சந்திப்பில் மருத்துவர்கள் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கருக்கலைப்புக்கு ஆதரவாக பல நாடுகளில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன

இலங்கையில் நாளொன்றுக்கு 600 -1000 வரையிலான சட்ட விரோத கருக்கலைப்பு இடம் பெறுவதாக கூறப்படுகின்றது. இது தாய்மாருக்கு பெரும் ஆபத்தாகவும் அமைகின்றது.

குறித்த காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு சட்ட ரீதியான அனுமதி கிடைக்கும் போது அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும். உள்நாட்டு சுகாதார துறையில் சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்றும் இது தொடர்பான மருத்துவர்கள் குழுவினால் சர்வமத தலைவர்களிடம் எடுத்து கூறப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறை காரணமாக பாதிக்கப்படுவர்கள் உள ரீதியாக தாக்கப்பட்டு துன்பங்களை எதிர்கொள்கின்றார்கள். கருவுற்றால் சமூகத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறை காரணமாக பாதிப்புக்குள்ளானவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகள் மதத்தலைவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் "மத கோட்டுபாடுகளின் அடிப்படையில் கருவை கொல்வது அந்த கோட்பாடுகளை மீறும் செயல்" என மதத்தலைவர்களினால் இது தொடர்பாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சட்டங்களின்படி கருக்கலைப்பு குற்றம் இல்லாமல் இருக்கலாம். மத கோட்பாடுகளில் அப்படி அல்ல. கருணை கொலையாக இருந்தாலும் கூட அது குற்றமாகவே கருதப்படுகின்றது.

சில சம்பவங்களை வைத்துக் கொண்டு இந்த விவகாரத்தை பொதுவாக பார்க்க முடியாது. தனி மனித உரிமைகளை ஏற்றுக் கொள்கின்ற அதேவேளை மத வரையறைக்குட்பட்டு இதனை அனுமதிக்க முடியாது.

உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களையும் தமது தரப்பில் முன் வைத்த மதத் தலைவர்கள் இதுபற்றி தொடர்ந்து கலந்துரையாடல்கள் இடம் பெற வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :