இலங்கை : டெங்குவால் உயிரிழந்தோரில் 68% பேர் பெண்கள்

டெங்கு

இலங்கையில் 2017-ம் ஆண்டு டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களில் 68% பேர் பெண்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.

"இந்நோயின் தாக்கம் பற்றி பெண்கள் கவனம் செலுத்துவது குறைவாக இருப்பதே இதற்கு காரணம்" என்கிறார் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நிகழ்ச்சி திட்ட இணைப்பாளரான டாக்டர் ஹசித திஸேரா.

இந்த வருடம் மே மாதம் முதல் ஜுன் வரை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, ஜுலை மாதத்திற்கு பின்னர் கணிசமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டாலும் அடுத்த மாதம் அதிக மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு மீண்டும் அதிகரிக்க கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையில் 1,52,000 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், 390 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறுகின்றது.

"டெங்கு நோயாளர்கள் என கண்டறியப்பட்டவர்களில் 30% பேர் பள்ளி மாணவர்கள். அது போன்று மரணமடைந்தவர்களிலும் 10% பேர் மாணவர்கள் "என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நிகழ்ச்சி திட்ட இணைப்பாளரான டாக்டர் ஹசித திஸேரா கூறுகின்றார்.

"நாடு தழுவிய அளவில் 2 லட்சம் இடங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதில் 20% இடங்கள் டெங்கு அபாயம் உள்ள இடங்களாக இனம் காணப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

"2015 ,2016-ம் ஆண்டுகளை விட இந்த ஆண்டு டெங்கு கண்டறியப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 2-3 மடங்கு அதிகரித்தாலும் இழப்பு வீதம் குறைவு" என்றும் டாக்டர் ஹசித திஸேரா சுட்டிக்காட்டுகின்றார்.

 பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :