இலங்கை மாகாணசபை தேர்தல்: உச்சநீதிமன்றம் போட்ட தடையால் தடுமாறும் அரசு

இலங்கையில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள அரசியல் சாசன 20ஆவது திருத்த மசோதா அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் (கோப்புப்படம்)
படக்குறிப்பு,

இலங்கை நாடாளுமன்றம் (கோப்புப்படம்)

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை சபாநாயகர் கரு ஜயசூரிய அதிகாரபூர்வமாக இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த திருத்தத்தில் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதால் நாடாளுமன்றத்தில் மூன்றுக்கு இரண்டு பங்கு பெரும்பான்மையுடனும், பொது மக்கள் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு சபாநாயகர் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அரசியல் சாசன 20ஆவது திருத்தத்தில் ஒரே நாளில் அனைத்து தேர்தல்களையும் நடத்தும் வகையில் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட வேண்டிய தேதியை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் தேதி வரை ஏனைய மாகாண சபைகளின் பதவிக்காலம் தொடரும். குறித்த தேதி கடைசியாக ஆட்சி அமைத்த மாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைவதற்கு பின்னராக இருக்க கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் சட்டத்தில் குறிப்புணர்த்தப்பட்ட வேறு காரணங்களுக்காக சபையொன்று கலைக்கப்படுமானால் அந்த சபை நாடாளுமன்றத்தினால் கலைக்கப்பட வேண்டுமென உத்தேச அரசியல் சாசனத்தின் 20ஆவது திருத்தம் குறிப்பிடுகின்றது.

இந்த திருத்தம் அரசியல் சாசனத்தை மீறுகின்ற செயல் என்று குறிப்பிட்டு இதனை சவாலுக்கு உட்படுத்தி கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 13 மனுதாரர்களால் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சட்ட மா அதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட்டு மனுக்களில் குறித்த திருத்தம் நாடாளுமன்றத்தில் மூன்றுக்கு இரண்டு பங்கு பெருன்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு பொது மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என மனுதாரர்கள் தமது மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :