3,800 மீட்டர் மணப்பெண் சேலையைத் தாங்கிப்பிடித்த மாணவர்கள்; விசாரணைக்கு உத்தரவு

கண்டியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றின் போது மணப்பெண் அணிந்த சுமார் 3,800 மீற்றர் நீளமான சாரியை தாங்கிச் செல்வதற்கு 250 பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அந்த அதிகார சபையின் தலைவி மரிணி டி லிவேரா விடுத்துள்ள அறிக்கையொன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கண்டி கண்நோருவ பகுதியில் இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் மணமகள் அணிந்த 3,800 மீற்றர் நீளமான சாரியை தாங்கிச் செல்வதற்கு 250 பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டதாகப் புகார் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடையுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களை இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதை அனுமதிக்க முடியாதென்று கூறியுள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இது சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் ஒரு செயலென்று குற்றம்சாட்டியுள்ளது.

எனவே இது தொடர்பாக விசாரணையொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த அதிகார சபை முதலில் மாணவர்களை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய கல்வி அதிகாரிகளிடமிருந்து விளக்கம் கோரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்துடன் மணப்பெண்ணுக்கு 3800 மீற்றர் நீளமான சேலை அணியப்பட்டதாகக் கூறப்படும் இந்த திருமண நிகழ்வில் முக்கிய விருந்தினராக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அக்கிள விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமே பாடசாலை மாணவர்களை பயன்படுத்தலாம் என்றும், வெளி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது முடியாதென்றும் தனிப்பட்ட சீருடையுடன் பயன்படுத்த முடியாதென்று அமைச்சர் அக்கிள விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்ப்பாக விசாரணையொன்றை நடத்துமாறு இலங்கை ஆசிரியர்கள் சங்கம் உற்பட பல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்