இலங்கை : நிதி அமைச்சின் கீழ் அதி உச்ச பதவிகளில் பெண்கள்

இலங்கையில் சுங்க திணைக்களத்தின் அதி உச்ச பதவியான இயக்குநர் நாயகம் பதவிக்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தர அதிகாரியான இவர் இலங்கை சுங்க திணக்களத்தின் இயக்குநர் நாயகமாக நியமனம் பெற்றுள்ள முதலாவது பெண் என்றும் முதலாவது சிறுபான்மை இனத்தவர் என்றும் கூறப்படுகின்ற போதிலும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இலங்கை நிர்வாக சேவையில் 26 வருடங்களாக பணியாற்றி வரும் பி. எஸ். எம் . சார்ள்ஸ் ஏற்கனவே வவுனியா மாவட்டத்தில் பிரதேச செயலாளராகவும் மாவட்ட அரசாங்க அதிபராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இவரது புதிய நியமனத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுங்கவரிகள் திணைக்கள இயக்குநர் நாயகமாக பணியாற்றிய டப்ளியு. ஏ. சூலானந்த பெரேரா பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நிதி அமைச்சராக மங்கள சமரவீர நியமனம் பெற்ற பின்னர் அவரது அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் அதி உச்ச பதவிகளுக்கு பெண்கள் முன்னுரிமை பெறுவதை காண முடிகின்றது.

சென்ற வாரம் மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகவும் பெண்ணொருவர் முதல் தடவையாக நியமனம் பெற்றிருக்கின்றார். இலங்கை நிர்வாக சேவையில் 32 வருட அனுபவத்தை கொண்டுள்ள ஏ. மீகாஸ்முல்ல என்ற பெண்மணி கடந்த வாரம் தனது கடமையை பொறுப்பேற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :