நாமல் ராஜபக்ஸ உட்பட 6 பேர் விளக்கமறியலில் வைப்பு

இலங்கையில் அம்பாந்தோட்டை நகரில் நடைபெற்ற ஆர்பாட்டம் தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை இரவு போலிஸாரால் கைது செய்யப்பட்ட கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உட்பட 6 பேரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Image caption அம்பாந்தோட்டை ஆர்ப்பட்டத்தின்போது....

நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.பி. சாணக்க மற்றும் பிரசன்ன ரணவீர மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிக்கார , சம்பத் அத்துக்கோறள நாட்டிற்கான இராணுவ அமைப்பின் செயற்பாட்டாளரான ஓய்வு இராணுவ அதிகாரி மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய நபர்கள் ஆவர்.

சம்பவம் தொடர்பாக வாக்கு மூலங்களை பதிவு செய்வதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாந்தோட்டை போலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு சட்டத்தரணிகளுடன் போலிஸ் நிலையத்தில் முன்னிலையானார்கள்.

வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரும் அம்பாந்தோட்டை மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Image caption நாமல் ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பதவிக் காலத்தில் அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் மத்தள என்னுமிடத்தில் நிர்மாணிக்கப்பட்டது மத்தள சர்வதேச விமான நிலையம்.

இந்த விமான நிலையம் திறக்கப்பட்ட நாளிலிருந்து நஷ்டத்தில் இயங்குவதால் அதனை இந்திய நிறுவனமொன்றிடம் நீண்ட கால குத்தகைக்கு கையளிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிரணியினரால் கடந்த வெள்ளிக்கிழமை அம்பாந்தோட்டை நகரில் ஆர்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

நீதிமன்றத் தடையை மீறி முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்தின் போது போலிஸாரின் வீதித் தடையை உடைத்தெறிந்து ஆர்பாட்டகாரர்கள் இந்திய துணை தூதுவராலயத்தை நோக்கி செல்ல முற்பட்டபோது குழப்ப நிலை ஏற்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் 6 பெண்கள் உட்பட 35ற்கும் மேற்பட்டோர் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்