இலங்கை அரசியல் கைதிகளுக்காக கடையடைப்பு: கோரிக்கை என்ன? பின்னணி என்ன?

வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள தமக்கு எதிரான வழக்குகளை வவுனியாவிலேயே நடத்த வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் இருக்கின்ற 3 அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஆதரித்தும்,132 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இலங்கை வடக்கு மாகாணத்தில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. பாடசாலைகள் இயங்கவில்லை. அரசு தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றின் பணிகள் பாதிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 பொது அமைப்புக்கள் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.

வீதிகளில் மக்களின் நடமாட்டமும் குறைவாகவே காணப்பட்டது. கடையடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ஆயினும், வவுனியாவில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்கான பேருந்து சேவைகள் இடம்பெற்றன.

இப்போது ஏன் போராட்டம்?

இந்தக் கடையடைப்புக்கு வவுனியா வெகுஜன போராட்ட ஒழுங்கமைப்புக்குழு, மார்க்சிச லெனினிசக் கட்சி, தமிழ் ஆசிரியர் சங்கம் மற்றும் வடபகுதியைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் ஆகியன ஆதரவு தெரிவித்திருந்தன.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தமிழ்த்தின விழாவின் பரிசளிப்பு விழாவுக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்தை ஈர்த்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்காகவே இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

உண்ணாவிரதத்துக்கு காரணம் என்ன?

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த இரண்டு வாரகாலமாக உண்ணாவிரதப் போராட்டத்தி;ல் ஈடுபட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவரும் கடந்த 8 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் என்ற இடத்தில் 26 அரச படையினரை 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை 4 வருடங்களாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் சாட்சிகளான இராணுவத்தினருக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதனால், அவர்கள் வவுனியாவுக்கு வந்து சாட்சியமளிக்க முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வழக்கை சிங்களப் பிரதேசமாகிய அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சாட்சிகள் தரப்பில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த வழக்கு சட்டமா அதிபரினால் (அட்டோனி ஜெனரல்) அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வழக்கு சிங்களப் பிரதேசமாகிய அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருப்பதனால், குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மொழிப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுடைய சட்டத்தரணிகளும் அங்கு செல்வதற்கு இயலாதவர்களாக இருக்கின்றார்கள்.

எனவே, இந்த வழக்கை வவுனியா மேல் நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் என்று இந்தக் கைதிகள் கோரியிருக்கின்றனர்.

தமது கோரிக்கையை முன்வைத்து அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபுட்டிருக்கின்றனர். இவர்களை விட நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் 132 தமிழ் அரசியல் கைதிகள் உரிய விசாரணைகளின்றி பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுவதுடன், ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனைகளின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

கோரிக்கைக்காக வழிபாடு

இதற்கிடையில், தமிழ் விருட்சம் அமைப்பினர் அந்தணர் ஒன்றியத்துடன் இணைந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை ஒழுங்கு செய்திருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்