இலங்கை: உண்ணாவிரதப் போராட்டக் கைதிகளின் உடல் நிலை மோசம்; தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Image caption அதிபர் சிறிசேனவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவரும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாகியுள்ளதையடுத்து, அவர்கள் அனுராதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுடைய உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'சிறப்பு ஏற்பாட்டின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்' என தெரிவித்துள்ளார்.

மேலும், 'கறுப்புக்கொடி ஏந்த வேண்டியதில்லை. வெள்ளைக் கொடியை ஏந்துங்கள். முரண்பாடுகளை வளர்த்து, வன்முறைகளை ஏற்படுத்த வேண்டாம். எந்தப் பிரச்சனையானாலும், பேசித்தான் தீர்க்க முடியும். வன்முறையால் தீர்க்க முடியாது' என்றும் கூறியுள்ளார்.

முன்னர், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கறுப்புக்கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தி, சிறிசேனவின் யாழ் விஜயத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சிகள் உட்பட 19 பொது அமைப்புகள் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரன் போன்றவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆயினும், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் எந்தவிதமான சலனமுமின்றி கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேசிய தமிழ்த்தின பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் வருகை தந்தபோது கல்லூரிக்கு முன்பு கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பதட்டமான அந்த சூழலில் ஜனாதிபதி திடீரென தமது காரில் இருந்து இறங்கி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி நடந்து சென்று அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டார்.

அவரைக் கண்டதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் உரத்த சத்தத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும், அவரைத் திரும்பிச் செல்லுமாறும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுடன் பேச்சுக்கள் நடத்தலாம் வாருங்கள் என அவர் அழைத்த போதிலும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனையடுத்து, அவர் கைதிகள் விவகாரத்தில் சிறப்பு ஏற்பாட்டின் கீழ் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என கூறினார். ஆயினும், அந்த சிறப்பு ஏற்பாடு என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

தன்னை எதிர்த்து கறுப்புக்கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதையும், காரில் இருந்து இறங்கி ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்ததையும், யாழ் இந்துக் கல்லூரி நிகழ்வில் பேசிய ஜனாதிபதி விசேடமாகத் தனது உரையில் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் ஆதரவில் பதவிக்கு வந்திருப்பதை நினைவூட்டி, தனது கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்த அவர், தனது கரங்களைப் பலப்படுத்தாவிட்டால், பேய்களே பலம் பெற்று விடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், போராட்டங்கள் நடத்தினாலும் பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன கூறியிருக்கிறார்.

அத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் கைதிகளின் வழக்குகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு மீண்டும் மாற்றப்படமாட்டாது என்றும், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்திலேயே விசாரணைகள் நடைபெறும் என்றும் சட்டமா அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சாட்சிகளின் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிப்பதிலும், எதிரிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, இந்தக் கைதிகளின் கோரிக்கையை ஏற்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் விடுத்த வேண்டுகோளுக்குப் பதிலளித்தபோதே சட்டமா அதிபர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள சாட்சிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்தே அந்த வழக்குகள் வவுனியாவில் இருந்து சட்டமா அதிபரினால் அனுராதரபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்