வாந்தியை கர்ப்பம் என கருதி பள்ளி மாணவியை நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக இலங்கையில் விசாரணை

அனுராதபுரம், மாவட்டத்தில் கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள பாள்ளி மாணவி ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறி அவரை பள்ளியில் இருந்து நீக்குவதற்கு அந்த பள்ளியின் அதிபர் எடுத்துள்ள தீர்மானம் குறித்து விசாரணை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை SENA VIDANAGAMA/AFP/Getty Images
Image caption செபம் சொல்லும் இலங்கை பள்ளிக்குழந்தைகள் (கோப்புப்படம்)

இது குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் சாலிய பீரிஸ், இந்த குற்றச்சாட்டு தொடர்ப்பாக சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரிடமிருந்து ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு படிக்கின்ற 15 வயதுடைய இந்த மாணவி பாடசாலைக்குள் திடீரென வாந்தி எடுத்ததால், அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்து பாடசாலை அதிபர் அவரை பள்ளியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவி தம்புள்ள அரசு வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் அவர் கர்ப்பம் அடையவில்லை என்று உறுதி செய்ததாகவும் அந்த புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த விதமான விசாரணைகளுமின்றி சம்பந்தப்பட்ட மாணவியை பாடசாலையிலிருந்து நீக்குவதற்கு பள்ளியின் அதிபர் எடுத்துள்ள தீர்மானம் குறித்து, மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பின்னர் இந்த மாணவிக்கு ஏற்பட்டுள்ள அநீதியை நிவர்த்தி செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை இந்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சம் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சர் அக்கிள விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அந்த விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை நீங்கள் பார்த்திராத `அற்புதமான' பெனால்டி கோல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நீங்கள் பார்த்திராத பெனால்டி முறையில் வியத்தகு கோல்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :