இலங்கை : கல்முனை முஸ்லிம் பிரதேசங்களிலும் கடையடைப்பு

இலங்கையின் கிழக்கே கல்முனை மாநகர சபையின் அதிகாரத்திற்குரிய பகுதியின் எல்லையை பிரிப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ள அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் சாய்ந்த மருது பிரதேச முஸ்லிம்களுக்குப் போட்டியாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை முஸ்லிம் பிரதேசங்களிலும் கடையடைப்பு
படக்குறிப்பு,

கல்முனை முஸ்லிம் பிரதேசங்களிலும் கடையடைப்பு

கல்முனை மாநகர சபை அதிகாரத்திலிருந்து தமது பிரதேசத்தை பிரித்து தனியான உள்ளூராட்சி சபையை அதாவது நகர சபையை ஏற்படுத்த வேண்டும் என ஏற்கெனவே சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்கள் போராடி வருகின்றனர்.

இந்தக் கோரிகக்கையை வலியுறுத்தி அந்தப் பிரதேச முஸ்லிம்களின் கடையடைப்பு புதன்கிழமை மூன்றாவது நாளாகத் தொடருகிறது.

இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கல்முனை பிரதேச முஸ்லிம்களும் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டங்களால் கல்முனை பிரதேசத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வரை கடையடைப்பு போராட்டம் தொடரும் என கல்முனை பிரதேச அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

படக்குறிப்பு,

சாய்ந்தமருது பிரதேசத்தில் 3வது நாளாக போராட்டம் தொடருகின்றது

1987ஆம் ஆண்டுக்கு முன்பு கல்முனை பிரதேசம் நான்கு உள்ளுராட்சி சபை நிர்வாகங்களை கொண்டிருந்தது. 1987ஆம் ஆண்டு கொண்ட வரப்பட்ட உள்ளுராட்சி சபைகள் தேர்தல்கள் சட்ட திருத்தம் காரணமாக ஒரு பிரதேச சபையாக மாற்றப்பட்டு பின்னர் மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் அதிகாரத்திற்குரிய பகுதி கல்முனை தமிழ், கல்முனை முஸ்லிம் மற்றும் சாய்ந்தமருது என மூன்று சிவில் நிர்வாக ரீதியான பிரிவுகளை கொண்டுள்ளது. 65 - 70 சத வீதம் வரை முஸ்லிம் வாக்காளர்களை கொண்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் அதிகார எல்லையை இரண்டாகப் பிரிக்கக் கூடாது. அப்படி பிரிப்பதாக இருந்தால் கல்முனை மாநகர சபை உட்பட நான்கு பிரிவாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தங்களின் பிரதான கோரிக்கையாக முன் வைக்கப்படுவதாக கல்முனை பிரதேச அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் கூட்டமைப்பு கூறுகின்றது.

படக்குறிப்பு,

கல்முனை நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது.

"ஏற்கனவே இருந்தது போன்று கல்முனை மாநகர சபை பகுதியை நான்கு சபைகளாக பிரிக்கும்போது சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் ஒரு சபை கிடைக்கும்" என்கிறார் கல்முனைகுடி பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவரான டாக்டர் எஸ்.எம்.ஏ .அஸீஸ் .

இதேவேளை சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீதிமன்ற தடை உத்தரவு போலிஸாரால் அறிவிக்கப்பட்டதையயடுத்து, சுமார் 12 மணித்தியாலயங்களின் பின்னர் அதாவது செவ்வாய்க்கிழமை இரவுடன் அந்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில் கல்முனை முஸ்லிம் மற்றும் சாய்ந்தமருது ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பு காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் தமிழ் பிரதேசத்தில் வழமை நிலை காணப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :