பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதில் இலங்கையின் தாமதம்: ஐரோப்பிய ஒன்றியம் ஏமாற்றம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதில் இலங்கை அரசு காட்டி வருகின்ற தாமதப் போக்கு ஏமாற்றமளிக்கின்றது என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பயணக் குழுவின் தலைவி ஜீன் லெம்பட்

இலங்கைக்கான குறுகிய கால பயணத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பயணக் குழுவின் தலைவி ஜீன் லெம்பட் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் நாற்பது வருடங்களாகத் தொடர்ந்து அமலில் உள்ள கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக கடந்த வருடம் அரசு உறுதியளித்திருந்தது.

'ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கு முன் நிபந்தனையாக முன்வைக்கப்பட்ட இந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகள் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்குவதற்கு அவசியமான நிபந்தனையான, அனைத்துலக மரபு நெறிகளையும், தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலைமையை ஆராய்வதற்காக ஜீன் லெம்பட் தலைமையிலான நான்கு பேர் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற குழு கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு தூதரகத்தில் செய்தியளார்களுடன் இவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அனைத்துலக மனித உரிமை வரையறைகளுக்கு ஏற்ற புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்று 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசு உயர் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

'அது நிறைவேற்றப்படும் என்று எங்களிடம் கூறப்பட்டது. எனவே, துரிதமாக மாற்றங்கள் ஏற்படும் என்று நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகள் முடிவுற்றவுடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புகிறோம்' என்றார் ஜீன் லெம்பட்.

ஜிஎஸ்பி வரிச்சலுகை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதுதானே என்று, இந்த சலுகையை பெற்றுக்கொண்டோர் ஆறுதலுடன் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்ததை விட தாமதமாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து, இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் தமது கரிசனையை வெளியிட்டனர். ஆயினும் முன்னேற்றத்திற்கு அவசியமான, அடித்தளம் அநேகமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :