இலங்கை: பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தில் 29,000 கட்டடங்கள்

பதுளை மாவட்டத்தில் இருக்கும் 98 பள்ளிக்கூடங்கள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பிரதேசங்களில் அமைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2014-இல் பதுளையில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பொருள் மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுள்ள அந்த நிலையத்தின் கட்டட ஆய்வாளர் கிரிஷான் சன்னக சுகதபால அண்மையில் தனது நிலையம் மேற்கொண்ட ஆய்வின்போது இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதன்படி சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் பதுளை மாவட்டத்தில் ஆளிஹெல பதுள்ள, கண்தேகேட்டிய, சொரனாதொட்ட, ஹெல்ல, ஹப்புதலே, பெரகல, வெளிமட மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே சம்பந்தப்பட்ட பள்ளிக் கட்டடங்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வது அவசியமென்றும் அந்த அமைப்பு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து கல்வி அமைச்சர் அக்கிள விராஜ் காரியவசமிடம் பிபிசி கேட்டபோது சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் தொடர்ப்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஆலோசனைகளைப் பெற்று விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை மேலும் கருத்து தெரிவித்துள்ள தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் ஆய்வாளர் கிரிஷான் சன்னக சுகதபால பதுளை மாவட்டத்தில் 29,000 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2014 பதுளை நிலச்சரிவில் சேதமடைந்த கட்டடங்கள்

அவற்றுள் 28,040 வீடுகள் 160 அரச நிறுவனங்கள் 691 வியாபார நிறுவனங்கள் மற்றும் 98 வழிபாட்டு கட்டடங்கள் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரா பிரியதர்ஷன யாப்பாவிடம் கேட்டபோது பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் மிக அதிகமாக காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கட்டடங்களை அகற்றும் திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கான மாற்று நிலங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் காணி அமைச்சிடம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சர்ச்சையை கிளப்பிய கிச்சடியில் அப்படி என்னதான் உள்ளது?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்