இலங்கை பெட்ரோல் தட்டுப்பாடு: இந்திய பெட்ரோல் தரமற்றது என நிராகரிப்பு

எரிபொருள் இல்லை என்ற பலகை

இலங்கையில் பெட்ரோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகின்றது. சில நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பையும் காண முடிகின்றது.

ஐந்தாவது நாளாக மக்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல் தரமாக இல்லாததால் அரசு பெட்ரோல் கூட்டு நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதுவே தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் ஆகும்.

கடந்த 18-ஆம் தேதி 40,000 மெட்ரிக் டான் பெட்ரோலுடன் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்த எரிபொருள் கப்பல் தொடர்ந்தும் துறைமுகத்திலே நங்கூரமிட்டுள்ளது.

தரம் குறைந்த பெட்ரோலை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அரசியல் ரீதியாக தனக்கு அழுத்தங்கள் தரப்பட்டதாக கூறுகின்றார் கனிமவளம் மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சரான அர்ஜுன ரணதுங்க.

" நிராகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு பதிலாக மாற்று எரிபொருள் கப்பலை அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருந்த இந்திய நிறுவனம் இறுதி நேரத்தில் மறுத்து விட்டது " என்றும் கொழும்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்தார்.

இதேவேளையில் ஐக்கிய அரபு ராஜ்யத்திலிருந்து 40,000 மெட்ரிக் டான் எரிபொருளுடன் புறப்பட்டுள்ள கப்பல் நாளை (புதன் கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று கனிமவள மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சு கூறுகின்றது.

அதன் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அநேகமாக வியாழக்கிழமை முதல் இயல்புநிலை திரும்பும் என அமைச்சு எதிர்பார்க்கின்றது.

பெரும்பாலான வாகன ஓட்டுநர்களும் அன்றாட தேவைகளுக்கு அதிகமாக பெட்ரோலை சேமிப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் இதன் காரணமாக தங்களிடமிருந்த கையிருப்பு முடிந்து விட்டதாகவும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரச பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியங்களிலுள்ள பெட்ரோல் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. இன்று 2400 மெட்ரிக் டான் பெட்ரோல் விநியோகிக்கப்படவிருப்பதாக கனிம வள மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சு கூறுகின்றது.

வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் விநியோகம் செய்யப்பட வேண்டும் என பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :