இலங்கை: காலியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்

இலங்கையில் காலி மாவட்டத்தில் கின்தொட்ட பகுதியில் இனங்களுக்கிடையில் பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராற்றின் தொடர்ச்சியாகவே அந்தப் பகுதியில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் இன ரீதியான பதற்ற நிலை தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

அன்றைய தினம் அந்தப் பகுதியில் காணப்பட்ட அமைதியின்மை காரணமாக போலீஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக சிறப்பு அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை நிலைமை வழமைக்கு திரும்பிய நிலையில் சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு மாலையில் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் இதனையடுத்து தங்களுக்கு எதிரான வன்முறைகள் இரவு ஆரம்பமானதாகவும் உள்ளுர் முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

கிங்தொட்ட பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு வருகை தந்த வெளியிடத்தை சேர்ந்த குழுவினரே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த வன்முறைகளின் போது அந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வியாபார நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கூறுகின்றார்.

அந்த பகுதியிலுள்ள பௌத்த விகாரையொன்றிற்கு அருகாமையிலே தங்களுக்கு எதிரான வன்முறையாளர்கள் குழுமி நிற்பதாகவும் பௌத்த மதகுருவொருவரின் பின் புலத்திலே இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் அந்த பகுதியிலுள்ள முஸ்லிம்கள் தன்னிடம் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கிங்தொட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற வன்முறைகளையடுத்து சனிக்கிழமை முற்பகல் 9 மணி வரை கிங்தொட்ட பகுதியிலும் அண்மித்த சில கிராமங்களிலும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“நண்பர்களை கொல்லாமல் தவிர்க்க ஐ.எஸ்-யை விட்டு வெளியேறினேன்”

சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று சனிக்கிழமை அதிகாலை அமைச்சர்களான ரிஷாத் பதியுதின், பைஸர் முஸ்தபா ஆகியோரும் சென்று பார்வையிட்டதோடு பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களையும் சந்தித்து உரையாடினர்.

தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை திட்டமிட்ட சதியாகவே பாதிப்புக்குள்ளான முஸ்லிம்கள் பார்ப்பதாக அங்கு சென்று திரும்பிய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதின் கூறுகின்றார்.

காலி - கொழும்பு நெடுஞ்சாலை வழியாக அந்த பகுதிக்கு சென்ற வேளை பாதுகாப்பு காரணங்களை காட்டி போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும் அதனையும் மீறி தான் சென்றதாக அமைச்சர் ரிஷாத் பதியுதின் தெரிவித்துள்ளார்.

பாதிப்புக்குள்ளான கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காலி - கிங்தொட்ட பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வேண்டுகோள்

காலி - கிங்தொட்ட பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலி - கிங்தொட்ட பகுதியில் ஏற்பட்ட அமையின்மை குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடாக செய்திகளை சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்க வேண்டாம் என அமைச்சர் சாகல ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல்களில் ஏற்பட்ட இரத்தம் சிந்துவதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் அமைச்சர் சாகல ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

காலி - கிங்தொட்ட பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படை மற்றும் இராணுவம் அழைக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆலோசனைகளின் பிரகாரம் குறித்த பகுதிக்கு இன்று காலை 9 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த பிரச்சினையை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காலி - கிங்தொட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு மோதல் சம்பவமொன்று ஏற்பட்டிருந்தது. இந்த மோதல் சம்பவத்தில் சிலர் காயடைந்திருந்ததுடன், சில கட்டிடங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த புகுதிக்கு பாதுகாப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

குறித்த பகுதியின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நேற்றிரவு முதல் இன்று காலை 9 மணி வரை 6 கிராம சேவகர் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இன்று காலை வரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்