இலங்கை உள்ளாட்சி தேர்தல் தாமதம்: அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றம் படத்தின் காப்புரிமை Getty Images

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று கையளித்துள்ளது. 

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ச்சியாக தள்ளிவைக்கப்படும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா பதில் கூற வேண்டும் என தெரிவித்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

தேர்தலை உரிய  நேரத்தில் நடத்துவதற்கு முடியாமையால் அமைச்சர் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட முதலாவது நம்பிக்கையில்லா பிரேரணை இதுவாகும்.

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (நவம்பர் 22, 2017 ) இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த இடைகாலத் தடை உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வரை நீடிக்கும் என நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது.

இந்த நீதிமன்ற உத்தரவின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு மேலும் காலதாமதம் ஏற்படலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 6 வாக்காளர்கள் தாக்கல் செய்திருந்த மனு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை மீறி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் செயற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தனது ரிட் மனுவின் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தான் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பைசர் முஸ்தபா குறிப்பிட்டிருந்தார்.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 27ஆம் தேதி வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில், நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைகால தடை உத்தரவினால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலையை தேர்தல்கள் செயலகம் தற்போது எதிர்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் சில தினங்களில் இந்த விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கும் வகையான கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். 

மக்கள் விடுதலை முன்னணியினால் மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை

உள்ளூராட்சி எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைகால தடை உத்தரவை பிறப்பித்துள்ளமை ஊடாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்பது உறுதியாவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.

இந்த விடயத்தை அடிப்படையாக கொண்டு அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை தமது கட்சி சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்துள்ள போதிலும், தாம் மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணையை அமைச்சருக்கு எதிராக கொண்டு வரவுள்ளதாகவும் முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :