புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பது ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதி நாளான நவம்பர் 16ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் நிகழ்த்திய உரை அண்மைக் காலத்தில் அவர் நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி நிகழ்த்தியிருக்கக்கூடிய உரைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

அன்று மாலையிலேயே சம்பந்தன், கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்து தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைகள் குறித்து குறிப்பாக, புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் மீதான தங்கள் நிலைப்பாடு பற்றி சுமார் மூன்று மணித்தியாலங்கள் விளக்கமளித்தார்.

அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தான் உரையாற்றியபோது தற்போதைய குருநாகல் மாவட்ட எம்.பியான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சபையில் பிரசன்னமாக இருந்து உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்ததாகவும் அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகள் தொடர்பில் அவரும் அவர் தலைமையிலான கூட்டு எதிரணியும் கடைப்பிடித்துவருகின்ற அணுகுமுறைகள் குறித்து கடுமையாக விமரிசனங்களை முன்வைத்து தான் பேசியபோதிலும் இடையூறு எதையும் செய்யாமல் அவர் அமைதியாக இருந்ததாகவும் சம்பந்தன் பத்திரிகை ஆசிரியர்களிடம் கூறினார்.

தனது உரையை அடுத்து பேசிய ராஜபக்ச தனது விமர்சனங்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து தனது உணர்வுகளை மதிப்பதாகக் கூறிவிட்டு பட்ஜெட்டைப் பற்றி மாத்திரம் கருத்துக்களை முன்வைத்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

உணர்வுபூர்வ வேண்டுகோள்

சம்பந்தன் அன்றைய தினம் தனதுரையில் அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளுக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருமாறு ராஜபக்சவிடம் மிகவும் உணர்வுபூர்வமான வேண்டுகோளை முன்வைத்தார்.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

ராஜபக்சவை, நாட்டு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்ட முக்கியமான ஓர் அரசியல் தலைவர் என்று வர்ணித்த சம்பந்தன் ஆட்சியதிகாரத்துக்கு மீண்டும் வருவதற்கு அரசியலமைப்பைப் பயன்படுத்தவேண்டாமென்றும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேறு ஏதாவது வழிமுறைகளை ராஜபக்சவும் அவரது கூட்டு எதிரணியும் கையாண்டால் அதைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பிரச்சினையில்லை என்றும் கூறினார்.

அதே வேண்டுகோளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் முன்வைப்பதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பாகிஸ்தானில் இந்து பெண்ணாக இருப்பது அவ்வளவு சுலபமா? (காணொளி)

திசை திருப்பும் பிரசாரம்?

நாடு மீண்டும் இருண்ட யுகமொன்றுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி தனது முழுமையான ஆதரவைத் தரவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட சம்பந்தன் இந்த விவகாரத்தில் அவர் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறை சமூகங்களுக்கிடையில் அமைதியின்மையைத் தோற்றுவிக்கக் கூடிய ஆபத்தைக்கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசியலமைப்பு வரைவு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை மையமாகக் கொண்டு தென்னிலங்கையில் எதிர்மறை பிரசாரங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அந்தப் பிரசாரங்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கின்ற ராஜபக்சவிடம் சம்பந்தன் விடுத்திருந்த இத்தகைய வேண்டுகோள் சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் இதே போன்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை தவிர்க்கமுடியாத வகையில் நினைவுக்குக் கொண்டுவருகிறது.

போலியான பிரசாரங்கள் மூலமாக மக்களைப் பிழையான முறையில் வழிநடத்தி அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளைச் சீர்குலைக்கவேண்டாமென்று ராஜபக்சவையும் அவரின் கூட்டு எதிரணியையும் ஜனாதிபதி அப்போது கேட்டுக்கொண்டார்.

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நாடு இன்னொரு ரத்தக்களரியைச் சந்திக்கவேண்டிவரும் என்று அன்றைய உரையில் எச்சரிக்கை செய்த ஜனாதிபதி சிறிசேன, நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு நிதானமானபோக்கைக் கடைப்பிடிக்கின்ற மிதவாதத் தமிழ்த் தலைவரான சம்பந்தனிடமிருந்து கிடைக்கக்கூடிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வடக்கு - கிழக்கு தலைமைத்துவத்திடமிருந்து எல்லாக் காலத்திலும் எதிர்பார்க்கமுடியாது என்று அறிவுறுத்தினார்.

ராஜபக்சவின் எதிர்மறை அணுகுமுறை?

ஜனாதிபதி சிறிசேனவினதும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனினதும் வேண்டுகோள்களுக்கு இடைப்பட்ட 12 மாத இடைவெளியில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான ராஜபக்சவின் நிலைப்பாடும் அணுகுமுறையும் ஒரு முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கப்படக்கூடிய நெகிழ்வுத்தன்மையையும் அரசியல் பக்குவத்தையும் பிரதிபலிப்பதாக இல்லை.

தவிர, கூடுதலான அளவுக்கு பிற்போக்குத் தன்மைகொண்டவையாக மாறியிருப்பதையும் காண முடிகிறது. நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறையுடன் சிந்தித்துச் செயற்படுபவராக ராஜபக்ச தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த வருடம் அரசியலமைப்பு சபையின் 6 உப குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டபோது அவற்றில் உள்ள பல விதப்புரைகள் நாட்டின் ஐக்கியத்துக்கும் சுயாதிபத்தியத்துக்கும் அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கக்கூடியவையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டி ராஜபக்ச அறிக்கையை வெளியிட்டபோதிலும் முற்று முழுதாக அறிக்கைகளை நிராகரிக்கவில்லை.

ஆனால் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இரு மாதங்களுக்கு முன்பே அரசியலமைப்புச் சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு, இப்போது விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அதை முழுமையாக ராஜபக்ச நிராகரித்திருப்பது மாத்திரமல்ல, நாட்டுக்குப் புதியதொரு அரசியலமைப்பு தேவையில்லை என்று கூறுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இச் சந்தர்ப்பத்தில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ராஜபக்சவைப்பார்த்து சம்பந்தன் கேட்ட முக்கியமான கேள்வியை மீண்டும் கேட்கவேண்டும் போலிருக்கிறது. புதியதொரு அரசியலமைப்பு நாட்டுக்கு இப்போது தேவையில்லை என்று அவர் கருதுவதாக இருந்தால் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டபோது ஏன் அதை சபைக்கு வந்து எதிர்க்கவில்லை?

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில், குறிப்பாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் ராஜபக்சவும் அவரின் கூட்டு எதிரணியும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

தேசிய இனப்பிரச்சினையில் முன்னாள் ஜனாதிபதியின் மனோபாவத்தைப் புரிந்துகொள்வதற்கு அவரின் கடந்த கால நிலைப்பாடுகளை, குறிப்பாக 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் திரும்பிப்பார்க்கவேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த தேர்தலில் ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விக்கிரமசிங்கவை எதிர்த்துப் போட்டியிட்டார். அவரின் பிரசாரங்கள் அந்த நேரத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளுக்கு எதிரான சக்திகளின் ஆதிக்கத்திலேயே இருந்தன.

அதன் காரணமாக ராஜபக்சவின் தேர்தல் களம் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு முற்றிலும் விரோதமான கோஷங்கள் நிறைந்ததாக விளங்கியது.பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தின் ஆதரவை சாத்தியமான அளவுக்கு திரட்டுவதே ராஜபக்சவின் நோக்கமாக இருந்தது.

தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ( வடக்கில் விடுதலை புலிகளினால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பகிஷ்கரிப்பே அவரின் வெற்றியைச் சாத்தியமாக்கியது) ஜனாதிபதி என்ற வகையில் ராஜபக்ச நோர்வே அனுசரணைச் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் தனது அரசாங்கத்துக்கு அக்கறை இருப்பதாக உலகிற்குக் காட்டிக்கொண்டார்.

அரசாங்கத் தூதுக் குழுவுக்கும் விடுதலை புலிகளின் தூதுக்குழுவுக்கும் இடையில் ஜெனீவாவில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்தபோதிலும் போரை முழு வீச்சில் முன்னெடுத்து விடுதலை புலிகளுக்கு எதிராக இராணுவ வெற்றியைப் பெறுவதே ராஜபக்சவின் உண்மையான நோக்கமாக இருந்தது.

ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஒருபுறத்தில் ஊழல் மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகமும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் குடும்ப அரசியல் ஆதிக்கமும் நெருக்கமான நண்பர்களுக்குச் சலுகை வழங்கும் போக்கும் தலைவிரித்தாடிய அதேவேளை மறுபுறத்தில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் இனக் குழுமப் பெரும்பான்மைவாதம் கடுமையாகத் தீவிரமடைந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

சிறுபான்மைச் சமூகங்களின் மனக்குறைகளையும் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக்கூட ஏற்றுக்கொள்வதென்பது நாட்டுக்கு பேராபத்தைக்கொண்டுவரக்கூடியது என்ற சிந்தனைப் போக்கு தென்னிலங்கையில் வலுவாக வேரூன்றுவதற்கேதுவான படுமோசமான அரசியல் கலாசாரம் தோற்றுவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைகளும் செயற்பாடுகளும் அந்தக் கலாசாரத்தை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டன.

மகிந்த ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராக விளங்கியதற்கு பிரதான காரணம் விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கப் படைகள் கண்ட வெற்றியேயாகும். அதே காரணத்துக்காகவே அவர் தமிழ் மக்களினால் வெறுக்கப்படுகிறார்.

பெரும்பான்மையினவாதக் கொள்கை

போர் வெற்றியில் குதூகலிக்கின்ற பெரும்பான்மையினவாதக் கொள்கைகளை அவர் முன்னெடுத்த காரணத்தினால் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதி ஒரு இராணுவவாத அரசியல் சிந்தனையின் ஆதிக்கத்திற்குள்ளானது.

தனது ஆதரவுத் தளத்தை வலுப்படுத்திக்கொள்வதற்காக இந்த இராணுவவாத அரசியல் சிந்தனைப் போக்கை ராஜபக்ச வெகு சாதுரியமாகப் பயன்படுத்திக்கொண்டார். இந்தச் சிந்தனையே இன்று 2015 ஜனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர் தலைமை தாங்குகின்ற கூட்டு எதிரணியை வழிநடத்திக்கொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

இத்தகைய பின்புலத்திலே, இனக் குழுமப் பெரும்பான்மைவாதத்தின் அடிப்படையிலான தனது அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி கைவிடுவார் என்று எதிர்பார்ப்பது வீணானது.

அரசியலமைப்புச் செயன்முறைகளையும் நெடுங்காலமாக நாட்டைப் பாதித்துக்கொண்டிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்காண்பதற்கான எந்தவொரு உருப்படியான முயற்சியையும் சீரகுலைப்பதற்காக, பெரும்பான்மைச் சமூகத்தை ஒரு தீவிர தேசியவாத- தேசபக்த மாயையில் தொடர்ந்தும் மூழ்கடித்துவைத்திருப்பதிலேயே ராஜபக்சவும் அவரது நேச அணிகளும் அக்கறையாக இருக்கிறார்கள்.

மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அரசியலமைப்புச் சீர்திருத்த செயன்முறைகள் தோல்வியுறுவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம் என்று ராஜபக்ச நம்புகிறார் என்பதே உண்மை.

(கட்டுரையாளர்- இலங்கையின் மூத்த பத்திரிக்கையாளர். தினக்குரல் இதழின் முன்னாள் பிரதம ஆசிரியர்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :