இலங்கை: எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிரான மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு மனுதாரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (30) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் குறித்து கடந்த இரண்டாம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து ஆறு வாக்காளர்கள் இந்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம், வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வரை இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட இடைகால தடை உத்தரவைத் தொடர்ந்து, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக கூட்டு எதிர்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன நாடாளுமன்றத்தில் இருவேறு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுகொண்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணைகளை 30 (இன்று) விசாரணைகளுக்கு எடுத்துகொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய உள்ளூராட்சி எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக வழங்கப்பட்ட இடைகால தடை உத்தரவை நீதிமன்றம் இன்று (30) ரத்து செய்துள்ளது.

தேர்தல் குறித்த அறிவிப்பு

உள்ளூராட்சி எல்லை நிர்ணய சர்ச்சையில்லாத 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல்கள் செயலகம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

பிற செய்திகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நம் இரவுகளை வெளிச்ச மாசிடம் இழக்கிறோமா? (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்