இலங்கை உள்ளூராட்சி தேர்தல்களின் தேசிய முக்கியத்துவம்

  • வீரகத்தி தனபாலசிங்கம்
  • மூத்த பத்திரிகையாளர்
இலங்கை உள்ளூராட்சி தேர்தல்களின் தேசிய முக்கியத்துவம்

பட மூலாதாரம், Getty Images

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

இலங்கையில் 2018 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டரை வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டுவந்த இந்த தேர்தல்கள் ஒரு பொதுத் தேர்தலுக்குரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இயங்கிவரும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் மீதான நாட்டு மக்களின் தற்போதைய அபிப்ராயத்தை அளவிடுவதற்கான ஒரு பரீட்சையாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. மேலும், பழைய வட்டார ரீதியான தேர்தல் முறையும் விகிதாசாரத் தேர்தல் முறையும் கலந்த புதிய முறையொன்று பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கின்ற முதல் சந்தர்ப்பமாகவும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அமைவதால் அவை கூடுதல்முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

2015 ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு நாடளாவிய ரீதியில் நடைபெறவிருக்கின்ற முதல் தேர்தல் இது. அரசாங்கத்தின் செல்வாக்கை மாத்திரமல்ல, நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல கட்சிகளினதும் செல்வாக்கு எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதையும் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நிச்சயம் வெளிக்காட்டப்போகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால், நாட்டின் பிரதான அரசியல் சக்திகளின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான ஒரு சர்வ ஜன வாக்கெடுப்பாகவே பிப்ரவரி தேர்தல்கள் நோக்கப்படுகின்றன.

அதேவேளை, தெற்கில் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியிலும் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியிலும் புதிய அரசியல் அணி சேர்க்கைகளுக்கான தெளிவான அறிகுறிகளையும் இன்றைய நிலவரம் சுட்டிக்காட்டுகிறது.

பிளவுண்ட சுதந்திரக் கட்சி

தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுமார் மூன்று வருடங்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வத் தலைவராக ஜனாதிபதி இருக்கின்ற போதிலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பிரிவினர் மட்டுமே அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு செயற்படுகிறார்கள். மற்றைய பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணி என்ற பெயரில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

ஜனாதிபதியின் அணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும்விட கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியின் அணியில் இருக்கிறார்கள். அத்துடன் உள்ளூராட்சி தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி சிறிசேனவின் அணியினர் பேச்சுவார்த்தை நடத்த நிர்ப்பந்திக்கப்படுகின்ற அளவுக்கு கூட்டு எதிரணி வலிமையானதாகவும் இருக்கிறது. ராஜபக்ச விசுவாசிகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் சிறிசேன அணியினரால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையாக இருக்கவில்லை.

அதனால், இணைப்பு பேச்சுவார்த்தைகள் இயல்பாகவே தோல்வியடைந்தன.

முன்னர் திட்டமிட்டதைப் போன்றே ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியில் உள்ள கட்சிகள் அவற்றின் வேட்பு மனுக்களை முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தாமரை மொட்டு சின்னத்தில் தாக்கல் செய்துகொண்டிருக்கின்றன.

சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி தேர்தல்களின்போது வேறு அணிகளின் சார்பில் செயற்பட்டால் நாடாளுமன்ற ஆசனங்களை இழக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கை செய்திருப்பதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பொதுஜன பெரமுனவின் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கூட்டு எதிரணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், குறிப்பாக ராஜபக்சவுடன் இருக்கும் சுதந்திர கட்சி அரசியல்வாதிகள் உள்ளூராட்சி தேர்தல்களில் தங்களுக்குப் பெருவெற்றி கிட்டுமென்று அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். தங்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த தீவிர எதிர்ப் பிரசாரங்களும் அரசியல் நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய உணர்வலையை ஏற்படுத்தியிருப்பதாக இவர்கள் நம்புகிறார்கள். அதில் ஒரளவுக்கு உண்மையிருந்தாலும், அந்த உணர்வலை கூட்டு எதிரணிக்கு ஆதரவான அதுவும் குறிப்பாக புதியதொரு கட்சியின் வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் இறங்குபவர்களுக்கு ஆதரவான வாக்கு அலையாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையில் சிறிசேனவுக்கு எந்த சவாலையும் தோற்றுவிக்கப்போவதில்லை என்ற போதிலும், அவரது அணியினர் தேர்தலில் சிறப்பான செயற்பாட்டை வெளிக்காட்ட முடியாமல் போகும்பட்சத்தில் சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அவரது அரசியல் செல்வாக்கிற்கும் ஆளுமைக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

ராஜபக்சவுக்கு உதவுமா?

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவைப் பொறுத்தவரையிலும் கூட புதிய கட்சியைத் தனது எதிர்கால அரசியலுக்கான உருப்படியான வாகனமாக நம்பிக்கையுடன் பயன்படுத்த முடியுமா இல்லையா என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டும்.

உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் அறிக்கையொன்றை விடுத்த ராஜபக்ச 'இது நாடு சந்திக்கப்போகும் தொடர்ச்சியான பல தேர்தல்களில் முதலாவது தேர்தல் ' என்று குறிப்பிட்டிருப்பதுடன் அந்தத் தொடரில் இறுதியில் வரவிருப்பது 2020 ஜனாதிபதி தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் என்று சுட்டிக்காட்டி அவற்றை தனது தலைமையில் உள்ள அரசியல் சக்திகள் எதிர்கொள்வதற்கு தயாராகிவிட்டன என்ற தொனியில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

ராஜபக்சவைப் பொறுத்தவரை, ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திர கட்சியும் சேர்ந்து அமைத்திருக்கும் இன்றைய அரசாங்கத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதை வெளிக்காட்டுவதற்கு மாத்திரமே உள்ளூராட்சி தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். வேறு எந்த அம்சத்தையும் வாக்களிக்கும்போது மக்கள் கருத்திலெடுக்கத் தேவையில்லை என்று அறிக்கை மூலம் ராஜபக்ச வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்.

ரணில் நம்பிக்கை

பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, சுதந்திர கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவு தனது கட்சியின் எதிர்காலத் தேர்தல் வெற்றி வாய்ப்புகளுக்கு பெரும் அனுகூலமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறார். 2015 நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்கும் கூடுதலான காலமாக பதவியில் இருக்கும் அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னிலைப் பங்காளி என்பதால் அந்த அரசாங்கம் செயல்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளின் தாக்கத்தை பெரிதும் எதிர்நோக்க வேண்டிய நிலையில் தனது கட்சியே இருக்கிறது என்பதை பிரதமர் மனதில் கொள்ளவேண்டியது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டுவந்த வாக்காளர்கள் பெரும் விரக்திக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் குறிப்பாக, ஆட்சி மாற்றத்துக்கு பெரும் பங்களிப்பைச் செய்த சிறுபான்மையினங்களைச் சேர்ந்த மக்கள் கூடுதல் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்த அதே மக்கள் ஆதரவு தங்களுக்கு இப்போது இருக்கிறது என்ற மெத்தனமான நினைப்பையோ நம்பிக்கையையோ அரசாங்கத்தின் தலைவர்களில் எவரும் இன்று கொண்டிருக்கமுடியாது.

தமிழர் அரசியல் நிலை

அதேவேளை, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் கடுமையாக எதிர்த்த தீவிர தேசியவாத சக்திகள் இப்போது பிளவுபட்டு நிற்கின்றனர். இந்த தீவிர தமிழ் தேசியவாத அரசியல் சக்திகளின் பிரதான அங்கங்களாக விளங்கிய இரு கட்சிகள் வெவ்வேறு திசைகளில் சென்று புதிய தேர்தல் கூட்டணிகளை அமைத்திருக்கின்றன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அமைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்)யின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசியவாத லட்சியத்தை முன்னெடுப்பதற்கெனக் கூறிக்கொண்டு இரு வருடங்களுக்கு முன்னர் சிவில் சமூக அமைப்பு என்ற பெயரில் தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்படுவதற்கு முன்னெடுக்கப்பட்ட பணிகளில் முன்னணிப் பாத்திரங்களை வகித்தனர்.

இவர்கள் இருவரது தீவிர பங்கேற்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வனின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் இருவருக்கும் இருந்த ஆற்றலும்தான் தமிழ் மக்கள் பேரவை மீது மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்தன என்பதில் சந்தேகமில்லை.

பட மூலாதாரம், Getty Images

கஜேந்திரகுமாரும் பிரேமச்சந்திரனும் வெவ்வேறு கூட்டணிகளை அமைத்துக்கொண்டு வெவ்வேறு சின்னங்களின் கீழ் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்திருக்கும் பின்புலத்தில் முக்கியமானதொரு கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது; தமிழ் மக்கள் பேரவையின் நிலை என்ன?

சில வாரங்களுக்கு முன்னர் யாழ்நகரில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமொன்றில் அதன் இணைத் தலைவரான முதலமைச்சரின் முன்னிலையில் கஜேந்திரகுமாரும் பிரேமச்சந்திரனும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக புதியதொரு கூட்டணியை அமைப்பது குறித்து யோசனை முன்வைத்தார்கள். அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கான களமாகவும் உள்ளூராட்சி தேர்தல்களைப் பயன்படுத்தவேண்டிய தேவை குறித்தும் இருவரும் கருத்து வெளியிட்டார்கள்.

அரசியல் கட்சியாக தமிழ் மக்கள் பேரவை மாறாது என்று தனக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்தே அதன் இணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள இணங்கியதாக கூறிவந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன் முன்னிலையிலேயே அதே பேரவையின் கூட்டத்தில் புதிய அரசியல் (தேர்தல்) கூட்டணி அமைப்பது குறித்து அரசியல்வாதிகள் பேசுவதற்கு எவ்வாறு அனுமதிக்கமுடியும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

செய்தியாளர்களிடம் அந்த விமர்சனத்துக்கு பதிலளித்த முதலமைச்சர், தமிழ் மக்கள் பேரவையின் லட்சியங்களுக்கும் இலக்குகளுக்கும் இசைவான முறையில் செயற்படக்கூடிய அணியொன்றை தேர்தலில் ஆதரிப்பதில் பிரச்சினையில்லை என்று கூறினார்.

ஆனால், பேரவையின் அந்தக் கூட்டம் நடைபெற்ற சில தினங்களுக்குள்ளாகவே தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாக கஜேந்திரகுமாருக்கும் பிரேமச்சந்திரனுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றிவிட்டன. விட்டுக்கொடுப்புகளுக்கு விரும்பாத கோட்பாட்டுப் பிடிவாதமுடைய தமிழ்த் தேசியவாதியாக தன்னை முன்னிறுத்துவதில் கஜேந்திரகுமார் அக்கறை காட்டுகின்ற அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடுமையான சவாலை தேர்தலில் தோற்றுவிக்க வேண்டுமென்றால் பிரபல்யமான ஒரு சின்னத்தின் கீழ் போட்டியிடவேண்டுமென்று பிரேமச்சந்திரன் வாதாடினார்.

பட மூலாதாரம், Getty Images

கஜேந்திரகுமாரின் தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு பிரேமச்சந்திரன் தயாராயில்லை. பிரேமச்சந்திரனின் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கஜேந்திரகுமார் இணங்கமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். இறுதியில் மூத்த அரசியல்வாதி வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக்கூடியதாக தேர்தல் கூட்டணியொன்றை பிரேமச்சந்திரன் அமைத்துக்கொண்டார்.

மக்கள் மத்தியில் பிரபல்யமான சின்னத்தில் போட்டியிட்டால்தான் கூட்டமைப்புக்குச் சவாலை தோற்றுவிக்கமுடியுமென்ற வாதம் உண்மையில் தமிழ் மக்களின் விவேகத்தை நிந்தனை செய்வதாக இருக்கிறது. அயல்நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவான அரசியலை பிரேமச்சந்திரன் முன்னெடுக்கிறார் என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுவதற்கு கஜேந்திரகுமார் தயங்கவில்லை.

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில் தீவிரமாகச் செயற்பட்ட இவர்கள் இருவரும் உள்ளூராட்சி தேர்தல்களுக்காக வெவ்வேறு திசைகளில் சென்று அரசியல் மாச்சரியங்களுடன் பிரசாரங்களை முன்னெடுத்திருக்கும் நிலையில் பேரவை இனிமேலும் செயற்பட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை தமிழ் மக்கள முன்னிலையில் வைக்க பேரவை ஒரு கூட்டத்தைக் கூட்டுமா?தங்களது முரண்பாடான தேர்தல் வியூகங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு எதிர்காலத்தில் கஜேந்திரகுமாரும் பிரேமச்சந்திரனும் பேரவையின் செயற்பாடுகளில் பங்கேற்கக்கூடிய அரசியல் முதிர்ச்சியை வெளிக்காட்டுவார்களா? முதலமைச்சர் தனது இணைத் தலைமையிலான பேரவையின் தற்போதைய நிலை என்ன என்பதை தமிழ் மக்களுக்கு கூற முன்வருவாரா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளுராட்சித் தேர்தல்களுக்காக ஆசனப் பங்கீடு தொடர்பில் முரண்பாடுகள் தொடர்ந்தவண்ணமேயிருக்கின்றன என்பது தமிழர் அரசியலின் இன்னொரு பக்கக் கேலிக்கூத்து.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :