இலங்கை: மைய வங்கி பத்திர விநியோகம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் (பத்திரங்கள்) விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் இந்த அறிக்கையை கையளித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பிலும் இதன்போது விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறிகள் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளான கே.டி.சித்ரசிறி, பிரசன்ன ஜயவர்தன மற்றும் முன்னாள் பிரதி கணக்காய்வாளர் வீ.கந்தசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை முடிவடைந்த போதிலும், அது சில மாதங்களுக்கு முன்னர் நீடிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நீட்டிக்கப்பட்ட கால எல்லை நாளையுடன் (31) நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்று (30) இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி முறிகள் விநியோகம் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அந்த அறிக்கை சட்ட மாஅதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசிம், பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியிருந்தது.

அத்துடன், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், பெர்பசுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் எலோசியஸ் மற்றும் அதன் உயர் அதிகாரிகளிடமும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியிருந்தது.

அரச, தனியார் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :