சீனா: கடலில் தீப்பிடித்த எண்ணெய் கப்பல் வெடிக்கும் அபாயம்

  • 8 ஜனவரி 2018
தீ படத்தின் காப்புரிமை Reuters

எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளாகி இரண்டு நாட்களாகியும் எண்ணெய் கசிவு தொடர்வதால், கிழக்கு சீன கடலில் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த சான்சி கப்பலில் பற்றிய தீ இன்னமும் எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காணாமல் போன 32 பேரில் 30 பேர் இரானியர்கள், 2 பேர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்.

தீவிபத்து ஏற்பட்டு கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு, உதவி செய்ய அமெரிக்க கடற்படை ராணுவ விமானத்தை அனுப்பியுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
Huge plumes of smoke were seen rising from the tanker

எண்ணெயை விட லேசான படிமத்தை கொண்டிருக்கக்கூடிய ஆவி மாதிரியான இந்த திரவம், கடல்பரப்பில் கலக்கும்போது, கச்சா எண்ணெயை ஏற்படுத்துவதை விட சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

"இந்த திரவம் நீராவியாகி, தண்ணீரில் கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது" என ஜே டீ டி எரிசக்தி சேவையின் ஜான் ட்ரிஸ்கோல் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நிறமோ அல்லது நறுமணமோ இந்த திரவத்திற்கு இல்லை என்பதால், இதனை கடலில் கண்டுபிடித்து சுத்தப்படுத்துவது மிக சிரமமானது" எனவும் அவர் கூறினார்.

1,.36,000 டன் அளவிலான இரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த சான்சி கப்பல் ஷாங்காயிலிருந்து 160 நாட்டிகல் மைல் தூரத்தில் சீன சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சீன சரக்கு கப்பலில் இருந்த 21 பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணிகளை மேற்கொள்ள, பல கப்பல்களை சீனா அனுப்பியுள்ள நிலையில், தென் கொரியாவும் கடலோர காவல் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் ஒன்றை இதற்காக அனுப்பியுள்ளது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :