தேசிய பிரச்சனைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இலங்கை உள்ளூராட்சி தேர்தல்

படத்தின் காப்புரிமை Ishara S.KODIKARA/AFP/Getty Images

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடக்க இன்னமும் சரியாக ஒரு வாரமே இருக்கும் நிலையில் அந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கின்றன.

பொதுவாக உள்ளூராட்சி சபைகளை பொறுத்தவரை அதற்கான தேர்தல்கால பிரசாரங்கள் உள்ளூர் விஷயங்களுக்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். ஆனால் இலங்கையை பொறுத்தவரை இங்கு இந்த தேர்தலுக்கான பிரசார மையப் பொருளாக தேசிய பிரச்சினைகளே பல கட்சிகளாலும், சுயேச்சைக் குழுக்களாலும் கையில் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தேசிய பெரும்பான்மையின கட்சிகளை பொறுத்தவரை ஒருவர் மீது மற்றவரது ஊழல் குற்றச்சாட்டுக்கள் பிரசாரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளை பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம் அவர்களின் பிரசார நடவடிக்கையில் பெரிதும் முன்னிறுத்தப்படுகின்றன.

உள்ளூர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் இல்லையா?

ஒப்பீட்டளவில் இலங்கை மிகவும் சிறிய நாடு என்பதாலும், அதன் உள்ளூராட்சி எல்லைகளும் மிகவும் நெருக்கமானவை என்பதாலும் தேசிய பிரச்சினைகளே இங்கு முக்கிய பிரச்சார பேசுபொருளாக இருக்கிறது என்று கூறப்படுகின்ற போதிலும், தேசியக் கட்சிகள் இந்த தேர்தலை தமது எதிர்காலத்துக்கான ஒரு முன்னோட்டமாகப் பார்ப்பதும் தேசிய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

சிறிய நாடு என்பதால் அனைத்துக் கட்சிகளின் தேசிய தலைவர்களும் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் நேரடியாக சென்று பிரசாரம் செய்யும் வாய்ப்பு உள்ளதால், உள்ளூர் அல்லது உள்ளூராட்சி தலைவர்கள் முக்கியத்துவம் இழந்து போகிறார்கள். அவர்களால் முன்வைக்கப்படும் உள்ளூர் அபிவிருத்தி, வளர்ச்சி போன்ற விசயங்களும் பின் தள்ளப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

தேசிய மட்டத்தில் முன்னிலை பெறுகின்ற பெரும்பான்மையின கட்சிகளை பொறுத்தவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன (கூட்டு எதிர்க்கட்சி) ஆகியவற்றுக்கிடையிலேயே கடுமையான போட்டி காணப்படுகின்றது.

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பிணை முறி சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம் மற்றும் கடந்த ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் பல ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள்தான் இங்கு ஒருவரை ஒருவர் விமர்சிப்பதற்கான பிரசார பொருளாக இதுவரை இருந்து வருகின்றது.

ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும் இந்த ஊழல் விவகாரங்களை முன்வைத்தே அடுத்தவரை குற்றம் சுமத்தி வருகின்றனர்.

வடக்கு கிழக்கு நிலவரம்

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரை அங்கு எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சி மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணி சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையிலேயே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளே விவாதப் பொருளாக இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே அங்கீகரித்திருப்பதாகவும், இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் தாமே தமிழர்களின் பிரதிநிதிகளாக மக்கள் ஆணையை பெற்றிருப்பதாகவும் பார்க்கப்படும் நிலையில், அந்த தீர்வு முயற்சிகளை வெற்றிகரமாக கொண்டு நடத்த மக்கள் தமக்கே வாக்களிக்க வேண்டும் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

ஏனைய தமிழ் கட்சிகள் பலமில்லாது இருப்பதாக கூறும் அவர், மத்தியில் இந்த தேர்தலே சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை ( மஹிந்த ராஜபக்‌ஷவா அல்லது மைத்திரிபால சிறிசேனவா?) நிர்ணயிக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலமும் இந்த தேர்தலின் முடிவுடன் தொடர்வுபட்டிருக்கலாம் என்பதாலும், ஏதாவது கணிசமான மாற்றம் இந்த தேர்தலால் மத்திய அரசில் ஏற்படுமாயின் அதன் தாக்கத்தை ஏனைய தமிழ் கட்சிகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் போகலாம் என்றும் கூறுகிறார். ஆகவே அப்படியான சூழ்நிலைகளை தமது கூட்டமைப்பினால் மாத்திரமே சமாளிக்க முடியும் என்றும் சித்தார்த்தன் குறிப்பிடுகிறார்.

இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழ் மக்கள் தந்த ஆணையை மீறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆளும் ஐக்கிய தேசியக்கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாக குற்றஞ்சாட்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க தமது கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோருகிறார்.

'அடுத்த அரசாங்கத்தை கோடிகாட்டும் தேர்தல்'

இப்போது நடக்கவிருப்பது உள்ளூராட்சி தேர்தலாக இருக்கின்ற போதிலும் தேசிய மட்டத்தில் முக்கிய கட்சிகளின் எதிர்கால பலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக இது இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் மூத்த செய்தியாளரான வித்தியாதரன், அடுத்த அரசு யார் என்பதை இந்த தேர்தல் கோடிகாட்டும் என்கிறார்.

இதனால், அனைத்துக்கட்சிகளும் இதனை ஒரு தேசிய மட்ட போட்டிக்கான களமாக கருதுவதாகவும், ஆனாலும் சில இடங்களில் மாத்திரம் இங்கு உள்ளூர்மட்ட அபிவிருத்தி குறித்து விவாதிக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இவற்றைவிட இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தமிழ் தோட்டதொழிலாளர்கள் மத்தியிலும் இரு தரப்பு மோதல்கள் நடக்கின்றன. ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களை கொண்ட தமிழ் முற்போக்கு முன்னணி ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி காணப்படுகின்றது.

அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

அங்கு ஐக்கிய தேசியக் கட்சியும் கணிசமான ஆதரவை கொண்டுள்ளது. அங்கு அபிவிருத்தி சம்பந்தப்பட்ட விசயங்கள் பிரசாரத்தில் ஓரளவு முன்னிலை பெறுகின்றன என்று கூறலாம். அதேபோல குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் மத்தியிலும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் முன்னணி பெறுகின்றன.

தேர்தல் முறையில் மாற்றம்:

இலங்கையில் 1977க்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் அல்லாமல் நேரடி தேர்தல் முறையையும் சேர்த்து ஒரு கலப்பு முறையில் இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. ஆகவே கடந்த காலங்களில் கட்சிகளுக்கு இருக்கும் நேரடி ஆதரவை கணக்கில் கொண்டு அவற்றின் பலத்தை கணித்துக் கூறியது போல இந்த முறை செய்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன.

ஒவ்வொரு வட்டாரத்திலும் (வட்டம்) தனிப்பட்ட வேட்பாளரின் செல்வாக்கும் இந்த முறை செல்வாக்கு செலுத்தும் என்பதால், யார் வெற்றி பெறுவார் என்பதை அறுதியிட்டு முன்கூட்டியே கணிப்பதிலும் அரசியல் பார்வையாளர்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் சில புதிய கட்டுப்பாடுகளால் ஆட்கள் அளவுக்கு அதிகமாக பிரசாரத்துக்காக ஊர்வலமாக செல்வது போன்றவை இந்த முறை குறைந்திருக்கிறது. இது தேர்தல் பிரசாரத்தை சுவாரஸ்யமற்றதாக்கிவிட்டதாக கூறுவோரும் உண்டு. ஆனால், இந்த கட்டுப்பாடுகள் ஒப்பீட்டளவில் இதுவரை வன்செயல்களை குறைத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கூறுகின்றன.

இதுவரை தேர்தல் பிரசாரங்கள் சுவாரஸ்யமாக இல்லாமல் இருக்கலாம், இனிவரும் நாட்களில் அவை சூடு பிடிக்கலாம், வன்முறைகள் குறைவாக இருக்கலாம், ஆனால், இதன் முடிவுகள் அரசியல் பார்வையாளர்கள் கூறுவதுபோல மத்திய ஆட்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: