இலங்கை: மத்திய வங்கி பிணை முறி ஊழல் குற்றச்சாட்டில் இருவர் கைது

இலங்கையில் அண்மைக்காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் மத்திய வங்கி பிணை முறி ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட இரு முக்கியஸ்தர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிணை முறி முறைகேடு தொடர்பாக மத்திய வாங்கி முன்பு 2015-இல் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் (கோப்புப் படம்)

2015 பிப்ரவரி மாதத்தில் நடந்ததாக கூறப்படும் 11,450 மில்லியன் இலங்கை ரூபாய்கள் மதிப்புடைய பிணை முறி ஊழலில் சம்பந்தப்பட்ட முதலாவது கைதுகள் இவையாகும்.

பெர்ப்பச்சுவல் றெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேன ஆகியோர் அவர்களது கொழும்பு இல்லங்களில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர்.

உடனடியாக அவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த வெள்ளியன்று கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இலங்கையின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுனா மகேந்திரன், அவரது மருமகனான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பெர்ப்பெச்சுவல் றெசரிஸ் நிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை இந்த வழக்கின் சந்தேக நபர்களாக அறிவித்தது.

அர்ஜுனா மகேந்திரன் அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோரை முக்கிய சந்தேக நபர்களாக அறிவித்த நீதிமன்றம், மகேந்திரன் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுனா மகேந்திரன் தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய வங்கியின் பிணை முறிகளை வாங்குவதில் அர்ஜுன் அலோசியஸின் நிறுவனம் அவரது மாமனாரான அப்போதையை மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுனா மகேந்திரன் உதவியில் உள்தகவல்களை பெற்று சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

பெர்ப்பச்சுவரி றெசரிஸ் நிறுவனத்தின் கணக்குகளை முடக்கி உத்தரவிட்ட நீதிமன்றம் அதன் சொத்துக்களை மூன்றாவது நபருக்கு மாற்றுவதற்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி ஊழல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிணை முறி விவகாரம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அண்மைக்காலங்களில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றது.

அர்ஜுனா மகேந்திரனை பிரதமரது நெருக்கமான கூட்டாளியாக வர்ணிக்கும் எதிர்க்கட்சிகள் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியை இது தொடர்பில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :