இலங்கை: உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறை

இலங்கை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களிடம் சில்மிஷம் படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்செயல்கள் குறித்து கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் வந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த இரவுடன் இங்கு பூர்த்தியாகியுள்ளன.

சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வாக்களிப்பு நடைபெறவிருப்பதுடன், அன்று மாலை முதல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை தேர்தலை முன்னிட்டு நாட்டில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கிடையே, பிரசார கால தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள், அவற்றில் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்செயல்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ளன.

25 சதவீதம் பெண் உறுப்பினர்கள்

இந்த தடவை ஒவ்வொரு சபையிலும் 25 சதவீதமாவது பெண் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்திருக்கிறது. அதன் காரணமாக பல தரப்பினரும் உடனடியாக பெண் வேட்பாளர்களை தேடிக்கண்டுபிடித்து போட்டியிடச் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதேவேளையில், இந்த தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் கடுமையான வன்முறைகளையும் எதிர்கொண்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

தமக்கு கிடைத்த 400க்கும் அதிகமான வன்முறைகளில் 34 வன்முறைகள் பெண் வேட்பாளர்களுக்கு எதிரானவை என்று கூறுகின்ற தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மையம், அவற்றில் தாக்குதல், உள மற்றும் மன ரீதியிலான துன்புறுத்தல்கள் ஆகியன அடங்குவதாக கூறியுள்ளது. அவர்களது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பாலியல் வல்லுறவு முயற்சி

தமக்கு 18க்கும் அதிகமான சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக கூறும் நீதியானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயலணிக்குழு அதில் ஒன்று பாலியல் வல்லுறவு முயற்சி என்றும் பல கொலை முயற்சிகளும் தாக்குதலும் இடம்பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதேவேளையில், பெண் வேட்பாளர்களின் குடும்பத்தினர் தாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வேட்பாளர்களின் கணவன், தந்தை, குழந்தை போன்றவர்கள்கூட மிரட்டலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பெண் வேட்பாளர்களுக்கு எதிரான தேர்தல் வன்முறைகள் உண்மையில் வெளியில் பேசப்படுவதைவிட மிகவும் மோசமான அளவுக்கு இருப்பதாக கூறும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பை சேர்ந்த ஷெரீன் சரூர், பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதனால் தமது குடும்பத்தினரால் தாக்கப்படும் சம்பவங்கள், குடும்பங்கள் பிரியும் நிலைகூட ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பிரசாரங்கள்

தமிழ் சமூகத்திலும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் நடந்துள்ளதாக கூறும் மனித உரிமை அமைப்புக்கள், முஸ்லிம் மௌலவிமார் பெண் வேட்பாளர்களை இஸ்லாத்துக்கு முரணானவர்கள் என்று வர்ணித்த சம்பவங்கள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் அவதூறு

சமூக ஊடகங்களில் பெண் வேட்பாளர்கள் மீது அவதூறு கூறும் பதிவுகளை திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு அவர்களின் நற்பெயரை கெடுக்கும் சம்பவங்கள் கணிசமாக நடந்திருப்பதாக ஷெரீன் சரூர் கூறியுள்ளார்.

குடும்பத்தினரால் பெண் வேட்பாளர்கள் தாக்கப்படும் சில சம்பவங்கள் தேர்தல் வன்முறைக்குள் வராமல் போய்விடும் ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்