இலங்கை: சமீப ஆண்டுகள் இல்லாத அளவில் அமைதியாக நடந்த உள்ளூராட்சி தேர்தல்கள்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பதிவுகள் அண்மைய வருடங்களில் இல்லாத அளவுக்கு அமைதியாக நடந்து முடிந்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கூறியுள்ளன.

வழிகாட்டும் பெண் காவலர்

இன்று காலையில் ஆரம்பமான வாக்களிப்புகள் சற்று முன்னர் முடிவடைந்த நிலையிலேயே கண்காணிப்பு அமைப்புக்களின் இந்த கணிப்பு வந்திருக்கிறது.

இலங்கையில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட 340 சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்புகள் இன்று நடந்தன. இந்த தேர்தலின் மூலம் 8325 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுளனர்.

சில வன்முறைகள் மீறல்கள் மாத்திரம்:

பொதுவாக இன்றைய வாக்களிப்பு காலை முதலே மிகவும் அமைதியாகவே நடந்திருக்கிறது. பெரிய அளவில், அதிகப்படியான வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும், வாக்களிப்பு சுமூகமாகவே இருந்தது. குறிப்பாக காலையில் வாக்களிப்பு பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாக்களிப்பு முடிந்த போது 60 வீதத்துக்கும் அதிகமாக வாக்களிப்பு வீதம் இருந்ததாக முதற்கட்ட அறிக்கைகள் கூறுகின்ற போதிலும், அதன் துல்லியமான பெறுமானத்தை பெற இன்னும் கால அவகாசம் தேவைப்படும்.

காலி, அநுராதபுரம், களுத்துறை, மாத்தளை, மாத்தறை, அம்பாறை, மொனராகலை, கேகாலை, அம்பாந்தோட்டை, பதுளை போன்ற மாவட்டங்களில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

இருந்தபோதிலும் சில வன்செயல்களும் நடந்ததாக நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயலணிக்குழு கூறியுள்ளது. இன்றைய தினத்தில் தம்மிடம் சுமார் 170 வரையிலான முறைப்பாடுகள் பதிவானதாகக் கூறும் அந்த அமைப்பு அவற்றில் தாக்குதல்கள், வாகனங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட 22 சம்பவங்கள் குறித்தும் முறைப்பாடு வந்துள்ளதாக கூறுகின்றது.

வடக்கு கிழக்கிலும் அமைதியான வாக்களிப்பு:

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்துள்ளது. ஆயினும் சில தாக்குதல் சம்பவங்கள் உட்பட சிறிய அளவிலான வன்முறைகள் குறித்தும் அங்கு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சில வேட்பாளர்களும் காயமடைந்துள்ளனர்.

வாக்குச் சாவடிகளிலேயே வாக்கு எண்ணிக்கை:

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே நடக்கின்றன. அவை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. அதன் பின்னர் சபைகள் மட்டத்தில் கணிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :