இலங்கையில் இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்ட கோயில் சிலைகள் உடைப்பு

இலங்கை படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA
Image caption கோப்புப்படம்

இலங்கையின் வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்ட ஒரு சிறு கோயில் உட்பட மூன்று சிறிய இந்து கோயில்களில் விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இன்று இலங்கையில் வாழும் சைவர்கள் மகா சிவராத்திரியை அனுட்டிக்கும் நிலையில் கடந்த இரவு இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது இங்குள்ள இந்துக்களின் மனதில் பெருத்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் உபதலைவரான சுப்ரமணியன் பிருந்தாவனநாதன் பிபிசியிடம் கூறினார்.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரர் ஆலயம் இந்திய ராணுவம் இங்கிருந்த காலத்தில் அவர்களால் சிறிய சிலை ஒன்று அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அது பெரிதுபடுத்தப்பட்டு அப்பகுதி மக்களால் வழிபடப்பட்டு வருகின்றது. அங்கிருந்த மூன்று சிலைகள் கடந்த இரவு இனந்தெரியாதோரால் அகற்றப்பட்டுவிட்டன.

மன்னார் தாழ்வுப்பாடு கீரி சந்தி எனும் இடத்தில் இருந்த ஆலையடி பிள்ளையார் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தள்ளாடியில் விமான ஓடுபாதைக்கு அருகாக திருக்கேதீஸ்வரம் வீதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று நான்காவது தடவையாக இப்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிருந்தாவனநாதன் கூறினார்.

இலங்கையை பொறுத்தவரை இங்குள்ள இந்துக்கள் சிவராத்திரி விரதத்தை அனுட்டிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் கூடுவது வழக்கம். அப்படியான நிலையில் அந்த ஆலயத்துக்கு செல்லும் ஒரு விக்கிரகம் உட்பட மூன்று இந்து வழிபாட்டிடங்கள் சேதமாக்கப்பட்டமை அங்கு வரும் பக்தர்களுக்கு பெரும் மனவலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான சபையின் உபதலைவரான பிருந்தாவனநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக பல சந்தர்ப்பங்களில் ஆலய சிலைகள் தாக்கப்பட்ட போது தமது முறைபாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தாம் போலிஸில் இந்தத்தடவை முறைப்பாடு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :