தமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல் முறை

இலங்கை

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்ட முறைமையானது குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைப்பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பல தரப்பினரும் கூறுகிறார்கள்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு தொங்கு நிலையை, இந்த தேர்தல் முடிவுகளை கணிக்கும் முறை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் தலைவர்களும், தேர்தல் ஆணைய உறுப்பினர்களும் குறைபட்டிருக்கிறார்கள்.

இலங்கையின் தென்பகுதியில் மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சி பல இடங்களில் தெளிவான பெரும்பான்மையை பெற்றிருப்பதால் அங்கு இது பெரும் சிரமங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால், வடக்கு கிழக்கில் இது ஆட்சியமைப்பதில் பெருத்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பிபிசிக்கு தெரிவித்தார்.

முன்னேற்றகரமான கலப்புத் தேர்தல் முறைமை

அதாவது நேரடி தொகுதிவாரி தேர்தல் மற்றும் விகிதாசார தேர்தல் ஆகியவற்றின் ஒரு கலப்பு முறையாக இந்த தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டது. நேரடி தொகுதி வாரியிலான முறைமையில் உள்ள சிறுபான்மை வாக்குகள் கணக்கில் இல்லாமல் போதல், விகிதாசார தேர்தலில் பெரும் தொகுதிகளில் அதிக பணவிரயத்தை வேட்பாளருக்கு ஏற்படுத்துதல் மற்றும் நேரடியான பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போதல் ஆகிய பிரச்சனைகளை கையாள இந்த கலப்பு முறை அறிமுகம் செய்துவிக்கப்பட்டது.

ஆனால், மிகச் சிறிய கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு கூட இந்த தேர்தல் முறை பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ள போதிலும், மறுபுறம் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத ஒருநிலையை வடக்கு கிழக்கில் ஏற்படுத்திவிட்டது என்கிறார் ரட்ணஜீவன் கூல்.

''தொங்கு அவை'' மற்றும் ''பொருந்தா கூட்டணி''

தேர்தல் ஆணையத்தை கூட கருத்துக் கேட்காமல் அவசர அவசரமாக நாடாளுமன்றம் கொண்டு வந்த இந்த தேர்தல் முறையால் எவரும் ஆட்சியமைக்க முடியாத ஒரு ''தொங்கு அவை'' நிலைமை நடைமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதனால் அரசியல் கட்சிகள் தமது கொள்கைக்கு பொருந்தாத ஏனையவர்களுடன் கூட்டு வைக்கும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அவர் குறைகூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதிருப்தி

இந்த தேர்தலின் வாக்குகளை கணிக்கும் முறை தமக்கு பெரும் குழப்பத்தை தந்திருப்பதாக கூறுகிறார், தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த மூத்த உறுப்பினரான கி. துரைராசசிங்கம்.

இந்த கலப்பு தேர்தல் முறைமை இப்படியான சிக்கலை ஏற்படுத்தும் என்பதை தாம் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முன்னணி கட்சியான தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி. துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபை உட்பட பெரும்பாலான சபைகளில் ஏற்பட்டுள்ள ''தொங்கு நிலைமை'' தமக்கு சங்கடத்தை தருவதாக கூறுகின்றார்.

கிழக்கில் பெரும் சிக்கல்

எப்படியிருந்த போதிலும், தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து செல்ல தாம் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார். ஆகவே வடக்கில் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு கடுமையான போட்டியாக திகழ்ந்த தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுடன் தாம் ஒரு ஏற்பாட்டை செய்துகொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக கூறும் அவர், ஆனால், கிழக்கில் தாம் பெரும் சிக்கலை எதிர்கொள்வதாக கூறுகிறார்.

கிழக்கில் கடந்த மாகாணசபையை போல முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பது மற்றும் தேசிய மட்டத்திலான கட்சிகளோடு சேர்ந்து ஆட்சியமைப்பது குறித்து தாம் ஆராய்ந்த போதிலும், இந்த விசயங்கள் தொடர்பாக பலவிதமான அபிப்பிராயங்கள் இருப்பதால் தாம் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இருந்தபோதிலும், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டுச் சேர்வதில் தமது உறுப்பினர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் துரைராசசிங்கம் குறிப்பிட்டார்.

டக்ளஸ் தேவானந்தா

வடமாகாணத்தில் இரு சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றிருக்கிறது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. ஏனைய சபைகளில் ஏற்பட்டுள்ள் தொங்கு நிலையை தீர்க்க தான் வெளியே இருந்து மாத்திரமே ஆதரவு கொடுப்பேன் என்கிறார் கட்சியின் பொதுச்செயலாளரான டக்ளஸ் தேவாநந்தா.

மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுபவர்களுக்கு ஆதரவும், ஏனையோருக்கும் எதிர்ப்பும் இருக்கும் என்று கூறுகின்ற அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆட்சியில் இணையமாட்டோம் என்கிறார்.

இந்த புதிய தேர்தல் முறை மிகச்சிறிய கட்சிகளுக்கு கூட பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் ஒரு சிறப்பான முறையாக பொதுவாகப் பார்க்கப்படுகின்ற போதிலும் அரசியல் கட்சி தலைவர்கள் அதனை சங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே பார்க்கிறார்கள். தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கும் அதே கருத்தே இருக்கிறது. ஆகவே அடுத்து வரவிருக்கும் மாகாண சபை தேர்தலுக்கும் இந்த முறைமையே கையாளப்பட்டால் நிலைமை என்னவாகுமோ என்பது அவர்களுக்கு முன்பாக உள்ள புதிய பிரச்சினையாக இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :