தடை: இலங்கையில் சட்டவிரோதமாக விற்கப்பட்டதா இந்தியர்களின் சிறுநீரகங்கள்?

வெளிநாட்டவர்களிடம் இருந்து சிறுநீரகங்களை கொடையாக பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ளது.

சிறுநீரகம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படுபவர்களிடம் இருந்து சட்ட விரோதமான முறையில் சிறுநீரகங்கள் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக எழுந்த சர்ச்சைக்குரிய தகவல்களை அடுத்து இலங்கை அரசாங்கம் இந்த தற்காலிக தடையை விதித்துள்ளது.

இப்படியாக இந்திய பிரஜைகளிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கப்படும் சிறுநீரகங்களை மாற்றீடு செய்வதற்கான அறுவை சிகிச்சைகள் இலங்கையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் நடப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவில் உள்ள ஏழைகளிடம் குறைந்த விலைக்கு சிறுநீரங்களை பெற்று அவற்றை பெரும் பணக்காரர்களுக்கு பெரும் விலைக்கு விற்றுவந்த குழுக்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை சட்டவிரோதமாகச் செய்யும் சிலரை கைது செய்ததாக இந்திய காவல்துறையினர் அறிவித்ததை தொடர்ந்து, இலங்கையிலும் இப்படியாக இங்கு பணம் கொடுத்து சிறுநீரகங்களை  விற்பதற்காக வந்தவர்கள் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

ஆனால், அவர்கள் இங்குள்ள ஒரு தடுப்பு முகாமில் இருந்து தப்பித்து ஓட, அதில் சிலர் மீண்டும் மன்னார் பேசாலை பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

இப்போது, சிறுநீரக விற்பனை ஊழல் குறித்த புலனாய்வுகள் தொடர்வதாக இலங்கை காவல் துறையினர் கூறுகின்றனர்.

இந்த நிலையிலேயே இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ராஜித சேனரத்ன வெளிநாடுகளில் இருந்து வரும் கொடையாளிகளிடம் இருந்து சிறுநீரகங்களை பெறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, கொடையாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் பணம் வழங்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை உடல் உறுப்புக்களை தானம் வழங்குவது இலங்கையில் அதிகரித்துள்ளதையும் அமைச்சர் பாராட்டியுள்ளார். அப்படியான கொடையை வழங்குபவர்களுக்கு, நிரந்தர இலவச சிகிச்சைகள் உட்பட சில உதவிகளை சுகாதார அமைச்சகம் வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :